மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த தீபக் என்பவர் 7 வருடங்களுக்கு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்தபோது அதே இடத்தில் வேலை செய்த நிஷா என்பவரோடு அறிமுகம் ஆகியுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது.
அதனைத் தொடர்ந்து தங்கள் காதலை கடந்த ஆண்டு இருவரும் வீட்டில் கூறியுள்ளனர். இவர்களின் திருமணத்துக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், நிச்சயதார்த்தமும் நடைபெற்றுள்ளது .ஆனால் இதற்குள் தீபக் வேறு ஒரு நகரத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதனால் அவர் தனது திருமணத்தை தள்ளிபோட்டுக்கொண்டே வந்துள்ளார். ஆனால் நிஷா உடனடியாக திருமணம் செய்யுமாறு தொடர்ந்து தீபக்கை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு பின் திருமணம் செய்யலாம் என தீபக் கூறியுள்ளார்.
இதனிடையே நிஷா தீபக் வேலை பார்க்கும் நகருக்கு சென்று அங்கு அவருடன் இரண்டு நாள் தங்கி உடனே திருமணம் செய்யுமாறு கூறியுள்ளார். ஆனால் அதற்கு தீபக் மறுத்த நிலையில், நிஷா காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். அதன்படி காவல் நிலையத்துக்கு இரு தரப்பும் வந்த நிலையில், உடனடியாக திருமணம் செய்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்தூரில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், மண்டபத்தில் வைத்து மீண்டும் தீபக் மற்றும் நிஷாவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனவருத்தமடைந்த தீபக் விஷம் குடித்துள்ளார்.
இந்த நிகழ்வை அறிந்த நிஷாவும் அதிர்ச்சியடைந்து விஷம் அருந்தியுள்ளார். இதனை அறிந்த உறவினர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தீபக் உயிரிழந்த நிலையில், நிஷா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.