தெலுங்கானா மாநில ஐதராபாத் எல்லாரெட்டிகுடா (Yellareddyguda) பகுதியை சேர்ந்தவர் ஜனார்தனன் - பிரேமலதா தம்பதி. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில், பள்ளி விடுமுறை என்பதால் அவர்கள் 2 பேரும் பிரேமலதாவின் தாய் வீட்டுக்கு சென்றுள்ளனர். எனவே வீட்டில் இந்த தம்பதி மட்டுமே இருந்துள்ளனர்.
இந்த சூழலில் நேற்றைய முன்தினம் இந்த தம்பதி தங்களது திருமண நாளை கொண்டாடியுள்ளனர். அப்போது பிரேமலதாவும், ஜனார்தனனும் பிரேமலதாவின் தாய் வீட்டுக்கு சென்று விட்டு, திருமண நாளை கொண்டாடினர். அனைவரும் சிறப்பாக கொண்டாடிவிட்டு பிரேமலதாவும், ஜனார்தனனும் தங்கள் வீடு திரும்பினர்.
அப்போது இடையில் எங்கோ சென்ற ஜனார்தன், மது அருந்திவிட்டு வீடு திரும்பியுள்ளார். கணவர் திருமண நாளில் மது அருந்தியதால் கோபமடைந்த மனைவி, அவரிடம் சண்டையிட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபம் உச்சத்துக்கு எரிய ஜனார்தனன் அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து தனது மனைவியின் தலையில் அடித்துள்ளார்.
இதில் பிரேமலதா இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து துடிதுடித்து உயிரிழந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந் ஜனார்தனன் அவரை எழுப்ப முயற்சித்துள்ளார். ஆனால் பிரேமலதா மூச்சு பேச்சு இன்றி இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். இதனால் பெரும் அதிர்ச்சியில் உறைந்த ஜனார்தனன் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து போயுள்ளார்.
இந்த சம்பவத்தில் மிகுந்த மன உளைச்சலில் இருந்த ஜனார்தனன், வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து மறுநாள் அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் வீட்டுக்கு வந்த போலீசார், அவர்கள் இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமண நாளில் மதுபோதையில் வாக்குவாதம் ஏற்பட்டதால் மனைவியை கணவரே கொலை செய்து, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தெலுங்கானாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.