மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் பகுதியை சேர்ந்தவர் சோனாலி வாகத் (21). இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணமாகியுள்ளது. இந்த சூழலில் இவர் தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். எனவே மருத்துவமனைக்கு அடிக்கடி சோதனை செய்ய சென்று வந்துள்ளார்.
அந்த வகையில் இந்த பெண் கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனைக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். ஆனால் இவர் இருக்கும் பகுதியில் போக்குவரத்து வசதி பிரச்னை இருப்பதால், அவர் வீட்டில் இருந்து சுமார் 3.2 கி.மீ தூரம் வரை நடந்து நெடுஞ்சாலை பகுதிக்கு வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து ஆட்டோ மூலம் அருகில் இருக்கும் ஒரு பகுதியில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று சோதனை மேற்கொண்டுள்ளார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து, மீண்டும் ஆட்டோ மூலம் ஆரம்ப சுகாதார நிலையத்த்தில் இருந்து நெடுஞ்சாலை பகுதி வரை சென்ற இவர், மீண்டும் அங்கிருந்து தனது வீட்டுக்கு நடந்தே சென்றுள்ளார். சுட்டெரிக்கும் வெயிலில் சுமார் 7 கி.மீ வரை நடந்தே சென்ற இட்னஹ் கர்ப்பிணி பெண்ணுக்கு இதனால் உடல்நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே மீட்டு மீண்டும் அதே ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கே இருக்கும் ஊழியர்கள் அவரை காசாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தினர். அதன்பேரில் அந்த பெண் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே நிறைமாத கர்ப்பிணியான அந்த பெண் துடித்துடித்து பலியானார். அவர் இறந்த உடனே, வயிற்றில் இருக்கும் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கடும் வெயிலில் 7 கி.மீ தூரம் நடந்தே மருத்துவமனைக்கு சென்ற கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.