நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் இந்த மாதத்துடன் தேர்வுகள் அனைத்தும் நிறைவடைந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இறுதி ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு Farewell கொண்டாடப்பட்டு வருகிறது. சில கல்லூரிகளில் ஆண்டு விழாவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்திருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த வெள்ளிக்கிழமை ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாணவ - மாணவியர்கள் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றிருந்தது. எனவே அனைவரும் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என ஆர்ப்பரித்து காணப்பட்டனர்.
இந்த சூழலில் இரு தரப்பினர் இடையே எதோ மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். கம்பு, கத்தி, உருட்டு கட்டை என இரு தரப்பினரும் தாக்கி மோதிக்கொண்டனர். அந்த சமயத்தில் சக மாணவர்கள் தடுக்க முயன்றபோது அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் நிகழ்ச்சி நடந்த இடம் யுத்த பூமியாக காட்சி அளித்தது. தொடர்ந்து சக மாணவ மாணவிகள் அங்கிருந்து வெளியேறினர்.
இந்த மோதலின் போது ஒரு கும்பல் மற்றொரு கும்பலை தாக்கும்போது கத்தியால் குத்தியதில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 4 ஆம் ஆண்டு படித்து வந்த மாணவன் பாஸ்கர் (22) என்பவர் படுகாயமடைந்தார். பின்னர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாணவரை மீட்ட சக மாணவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே இந்த கலவரம் சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில், அவர்கள் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்லூரி ஆண்டு விழாவில் 2 தரப்பு மாணவர்களுடக்கிடையே வெடித்த மோதலால், 22 வயது மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளது கர்நாடகாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.