தெலங்கானா மாநிலம் அக்கானபட் என்ற பகுதியை அடுத்துள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சிதா - ஸ்ரீகாந்த் தம்பதி. இவர்களுக்கு தேவனுரி அபினவ் என்ற 2 வயதில் மகன் உள்ளார். இந்த சூழலில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இந்த சிறுவன் விளையாடி கொண்டிருந்தபோது, தவறி கீழே விழுந்துள்ளார்.
அப்போது அருகில் இருந்த கத்தி ஒன்றின் மீது சிறுவன் விழுந்ததில், அவனது கழுத்தில் கத்தி பாய்ந்தது. இதையடுத்து சிறுவனை பெற்றோர்கள் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். சுமார் 5 லட்சம் வரை செலவு செய்து தங்கள் மகனை பெற்றோர் காப்பற்றினர். ஏறத்தாழ மரணத்தின் வாயிலுக்கு சென்று சிறுவன் திரும்பியுள்ளார்.
6 மாதங்களுக்கு முன்னர் நடந்த இந்த சம்பவத்தை அடுத்து, சிறுவனை பெற்றோர் கவனமாக பார்த்துக்கொண்டனர். இருப்பினும் சில நேரங்களில் கைமீறி அசம்பாவிதம் நிகழ்கிறது. 6 மாதங்களுக்கு முன்னர் மரணத்தின் பிடியில் இருந்து தப்பித்த சிறுவன், தற்போது மீண்டும் அதே போல் கொடிய விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தன்று சிறுவன் தனது வீட்டு வாசலில் நின்று விளையாடி கொண்டிருந்தான். அப்போது அவர்கள் வீட்டின் மேல் இருக்கும் கூரையில் குரங்கு கூட்டம் குதித்துள்ளது. இதில் அங்கிருந்த சிறிய பாறாங்கல் ஒன்று உருண்டு விளையாடி கொண்டிருந்த சிறுவனின் தலையில் பட்டென்று விழுந்துள்ளது. இந்த கோரவிபத்தில் சிறுவன் கல்லுக்கு கீழும் சிக்கியுள்ளதாக கூறபடுகிறது.
இந்த நிலையில், சிறுவனின் அலறல் சத்தத்தை கேட்டு வந்த பெற்றோர் கதறி அழுதனர். உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே சிறுவனை சோதனை செய்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டு, சிறுவனின் உடல் உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டது.
தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 6 மாதங்களுக்கு முன்னர் மரணத்தின் வாயிலை சந்தித்து உயிர் பிழைத்த சிறுவன், தற்போது குரங்கு கூட்டத்தால் பாறாங்கல் தலையில் விழுந்து உயிரிழந்துள்ளது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.