சட்டமேதை பாப சாகேப் டாக்டர் அம்பேத்கரின் 133வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதைமுன்னிட்டு பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
சென்னையில் கூட அம்பேத்கரின் நினைவு மண்டபத்திற்குச் சென்று அங்கு அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதேபோன்று சமூகவலைத்தளங்களிலும் பலரும் அம்பேத்கரின் கருத்தைப் பின்பற்றுவோம் என கூறி அவரது படத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க பெண் நிர்வாகி ஒருவர் தனது ட்விட்டரில் அம்பேத்கர் படத்திற்குப் பதில் விவேகாந்தனர் படத்தைப் பகிர்ந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் கிண்டலை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் காசிரெட்டி சிந்து ரகுநாத் ரெட்டி. இவர் பா.ஜ.க கட்சியின் இளைஞர் பிரிவின் மாநில இணை அமைப்பாளராக உள்ளார். இவர் இன்று அண்ணல் அம்பேத்கரின் பிறந்தாளை முன்னிட்டு ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளில் இந்தியச் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும் சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்கான அர்ப்பணிப்புக்கும் அவர் ஆற்றிய முடிவில்லாத பங்களிப்பை நினைவு கூறுவதே அவருக்கு நாம் செய்யும் அஞ்சலிகள்" என தெரிவித்துள்ளார்.
இதை எல்லாம் சரியாகப் பதிவிட்ட அவர், அம்பேத்கர் படத்திற்குப் பதில் விவேகாந்தரின்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த பலரும் கிண்டல் அடுத்துள்ளனர். பின்னர்தான் தாம் தவறான படத்தைப் பதிவிட்டதை உணர்ந்து கொண்ட அவர் உடனே அந்த பதிவை நீக்கியுள்ளார்.
பிறகு மீண்டும் அம்பேத்கர் படத்துடன் தனது புதிய பதிவை வெளியிட்டுள்ளார். இருந்தாலும் அவர் நீக்குவதற்கு முன்பு முந்தை பதிவை ஸ்கிரீன் சார்ட் எடுத்த பலரும் அதை வெளியிட்டு அம்பேத்கருக்கும், விவேகானந்தருக்குக் கூட உங்களுக்கு வித்தியாசம் தெரியாதா? என கிண்டல் அடித்து வருகின்றனர்.