பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த ரெய்னாவின் மாமா சில மர்ம நபர்களால் கடந்த 2020-ம் அவர் வீட்டிலேயே தாக்கிக் கொல்லப்பட்டார். மேலும் அவரது மனைவி பிள்ளைகளும் அந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்தனர். அதன் பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிள்ளைகளில் ஒருவரும் உயிரிழந்தார்.
இதுதவிர ரெய்னாவின் அத்தை உடல்நிலை மோசமாக நிலையில் இருந்தார். இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ரெய்னா “பஞ்சாபில் என் குடும்பத்துக்கு நடந்தது மிகக் கொடூரம் என்பதையும் தாண்டியது. என்னுடைய மாமா வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். என்னுடைய அத்தை மற்றும் அவர்களது பிள்ளைகள் கடுமையாக காயமடைந்துள்ளனர். துரதிருஷ்டவசமாக உயிருக்கு போராடிக்கொண்டிருந்த எனது மாமா மகன் நேற்று இரவு இறந்துவிட்டார். என்னுடைய அத்தை மிக மோசமான நிலையில் உள்ளார்.” எனக் கூறியிருந்தார்.
மேலும் அப்போதைய பஞ்சாப் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங்கை டேக் செய்து அந்த குற்றவாளிகளை விட்டுவிடக்கூடாது எனவும் ரெய்னா கோரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிஸார் இது தொடர்பாக விசாரணை நடத்தி இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு தேடி வந்தனர்.
இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலம் சஹாதுடி சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை நிறுத்தி சோதனையிட முயன்றனர்.ஆனால் அவர்கள் திடீரென போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்த கரும்பு வயலுக்குள் தப்பி ஓடினர்.
இதனைத் தொடர்ந்து ஆயுதங்களோடு அவர்களை போலிஸார் துரத்திச் சென்று அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒருவர் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், ஒருவர் தப்பித்து ஓடியுள்ளார். சுட்டுகொல்லப்பட்டவரிடம் இருந்து ரிவால்வர், கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அந்த குற்றவாளிதான் சுரேஸ் ரெய்னா மாமா கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்ட ரஷீத் என்பது தெரியவந்தது.