கர்நாடகாவில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக தங்களது தேர்தல் பிரச்சாரங்களைத் தொடங்கிவிட்டனர்.
மேலும், இப்போது வாக்காளர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி வருகிறார்கள். அதேபோல் பா.ஜ.க கட்சிக்குள் இருக்கும் மோதல் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து கொண்டிருக்கிறது.
சில நாட்களாகவே தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி, முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மற்றும் அவரது மகன் விஜயேந்திராவுக்கு எதிராகப் பேசி வருகிறார். மேலும் பா.ஜ.க மேலிடத்தின் அழுத்தம் காரணமாகத்தான் எடியூரப்பா முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். இதற்குப் பின்னர்தான் பசவராஜ் பொம்மை முதலமைச்சராகப் பதவியேற்றார்.
இந்நிலையில்தான் மீண்டும் எடியூரப்பாவின் குடும்பம் கர்நாடகாவில் ஆதிக்கம் செலுத்தக்கூடாது என அவருக்கு எதிராக பா.ஜ.கவினர் போர் குரல் எழுப்பி வருகின்றனர்.
இதற்கிடையில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கர்நாடகா வந்துள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எடியூரப்பாவின் இல்லத்திற்கு சென்றுள்ளது பா.ஜ.கவிற்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்போது அவரை வரவேற்க எடியூரப்பா மற்றும் அரவது மகன் பி.ஓய். விஜயேந்திரா ஆகியோர் பூங்கொத்துடன் காத்துக்கொண்டிருந்தனர். பிறகுத் தனது வாகனத்தில் வீட்டிற்கு வந்த அமித்ஷாவை இருவரும் வரவேற்றனர்.
அப்போது முதலில் எடியூரப்பா அமித்ஷாவுக்கு பூங்கொத்து கொடுக்க முயன்றார். ஆனால் பூங்கொத்தை மகன் கையில் கொடுக்கும்படி அமித்ஷா கூறினார். இதையடுத்து பூங்கொத்தை மகன் கையில் கொடுத்தார். பிறகு அவர் பூங்கொத்தை அமித்ஷா கையில் கொடுத்து வரவேற்றார். அப்போது விஜயேந்திராவை நெருக்கமாக அமித்ஷா கட்டி அணைத்துக் கொண்டார். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.