பொதுவாக திருமணம் என்பது பெரியோர்களால் பெண், மாப்பிள்ளை வீட்டு சார்பாக நிச்சயிக்கப்பட்டு உற்றார் உறவினரை அழைத்து நடக்கும். சிலர் காதல் திருமணம் செய்துகொள்வர். மேலும் சிலர் லவ்-கம் அரேஞ் திருமணம் செய்துகொள்வர். இப்படி நடக்கும் திருமணங்கள் சில நேரங்களில் இறுதி கட்டம் வரை நின்று போய் விடும்.
அதற்கு வரதட்சணை, குற்றம், இறப்பு என பல காரணங்கள் இருக்கும். ஆனால் இங்கு ஒருவர் திருமணத்துக்காக பார்ட்டி கொடுத்து, அதில் குடித்ததால், போதையில் தனக்கு நடக்க இருந்த திருமணத்தை மறந்து போனதால், திருமணமே நின்றுபோயுள் சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தால் மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் பெரும் மன உளைச்சலில் உள்ளனர்.
பீகார் மாநிலம் பகல்புர் பகுதியை அடுத்துள்ளது சுல்தான்கஞ்ச் என்ற கிராமம். இங்கு இளைஞர் ஒருவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்றைய முன்தினம் இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்திற்கு பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் தடபுடலாக ஏற்பாடு செய்திருந்தனர்.
அதோடு இந்த திருமணத்துக்காக மணமகன் தனது நண்பர்ளுக்கு பார்ட்டி கொடுத்துள்ளார். இந்த பார்ட்டியில் நண்பர்களோடு மணமகனும் மது அருந்தியுள்ளார். இதனால் மணமகன் தனக்கு நடக்க இருந்த திருமணத்தையே மறந்துள்ளார். இதனால் மறுநாள் திருமணத்திற்கு அவர் செல்லவில்லை. மண்டபத்தில் பெண் வீட்டார், மணப்பெண்ணும் காத்திருந்த நிலையில், மாப்பிள்ளை வரவே இல்லை.
நீண்ட நேரத்துக்கு பிறகு சுயநினைவுக்கு வந்த மணமகன், தனக்கு இன்றுதானே திருமணம் என்ற தெளிவு பெற்று ஓடோடி வந்துள்ளார். ஆனால் அவரை மணமகள் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று கூறி மறுத்துள்ளார். இப்படி ஒரு பொறுப்பற்ற மனிதருடன் தன்னால் வாழ்நாள் முழுவதும் இருக்க முடியாது என்று கூறி திருமணம் செய்ய மறுத்துள்ளார் மணப்பெண்.
இதைத்தொடர்ந்து மணப்பெண்ணின் முடிவு ஞாயம் என்று எண்ணிய பெண்ணின் குடும்பத்தாரும் திருமணத்தை நிறுத்தியுள்ளனர். மேலும் திருமணத்திற்கான செலவுத் தொகையை தங்களுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என்றும் பெண் வீட்டினர் மாப்பிள்ளை வீட்டாரிடம் கேட்டுள்ளனர். அதோடு இந்த சம்பவம் குறித்து காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தனது திருமணத்தையே மறக்கும் அளவுக்கு குடித்து மட்டையான மணமகனால், அவரது திருமணம் நின்று போயுள்ள சம்பவம் பீகாரில் பெரும் பார்ப்பப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இதே போல் அசாமில் மதுபோதையில் மனமேடையிலே மணமகன் உறங்கியதால், மணப்பெண் திருமணத்தை நிறுத்தியுள்ள நிகழ்வு கடந்த 6 நாட்களுக்கு முன்னர் நடந்துள்ளது.
அதற்கு முன்னதாக உத்தர பிரதேசத்தில் மணமகள் 12-ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றதாக கூறி மணமகன் திருமணத்தை நிறுத்தியுள்ள நிகழ்வு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.