மகாராஷ்டிர மாநிலம் மும்பை பிரதாப் நகர் என்ற பகுதியை சேர்ந்தவர் ஷமா ஆஷிப் சேக் (27). இவருக்கு அயத் ஆஷிப் சேக் (9) என்ற மகள் உள்ளார். அயத் ஆஷிப், ஜோகேஸ்வரி என்ற பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று தாய் ஷமா ஆஷிப், தனது மகள் அயத் ஆஷிப்பை பள்ளி முடிந்து அழைக்க சென்றுள்ளார். அப்போது தனது மகளை அழைத்துக்கொண்டு ஆட்டோ ரிக்ஷா ஒன்றில் ஏறியுள்ளார். இருவரும் அந்த ஆட்டோவில் பயணித்தபோது, அந்த ஆட்டோ ஜோகேஸ்வரி மேற்கு விரைவு சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது சால்யக் மருத்துவமனை அருகே அந்த ஆட்டோ சென்றுகொண்டிருந்தபோது அந்த சமயத்தில் அந்த பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 14 மாடி உயர கட்டிடத்தில் இருந்து கனமான இரும்பு பைப் கீழே பொத்தென்று விழுந்தது. இதில் இரும்பு கம்பி தாய் - மகள் வந்துகொண்டிருந்த ஆட்டோ மீது விழுந்துள்ளது.
எதிர்பாரா விதமாக கம்பி விழுந்தபோது, ஆட்டோ மேல் உள்ள திரை கிழிந்து அந்த கம்பி தாய் மற்றும் மகள் மீது விழுந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர்கள் இருவரும் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே தாய் ஷமா ஆஷிப் பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுமியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தொடர்ந்து 2 பேரின் உடல்களையும் மீட்ட அதிகாரிகள் உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். தொடர்ந்து இந்த சம்பவத்துக்கு காரணமான, கட்டுமான நிறுவனத்தின் மீது கடுமையான வழக்குப்பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளியிலிருந்து மகளை வீட்டுக்கு அழைத்து செல்லும் வழியில் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து விழுந்த இரும்பு கம்பி தாக்கி தாய், மகள் பலியான சம்பவம் மும்பையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.