புதுச்சேரி அரசின் குடிமைப்பொருள் வழங்கல்துறை சமீபத்தில் ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அரசின் மானியம், நலத்திட்டம் பெற விரும்பாத வசதி படைத்தவர்கள் தங்கள் ரேஷன் கார்டை ஒப்படைத்து கவுரவ கார்டுகளாக மாற்றிக்கொள்ளும்படி அழைப்பு விடுத்திருந்தது.
இதைத்தொடர்ந்து பா.ஜ.க அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணக்குமார், செல்வகணபதி எம்பி, பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், அசோக்பாபு, வெங்கடேசன், ராமலிங்கம், சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர் ஆகியோர் குடிமைப்பொருள் வழங்கல் துறை இயக்குநர் சக்திவேலிடம், தங்கள் ரேஷன் கார்டுகளை ஒப்படைத்து கவுரவ ரேஷன்கார்டு வழங்கும்படி கோரிக்கை வைத்தனர்.
இதனிடையே ரேஷன் கார்டை ஒப்படைக்கும் போது பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரம் அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஒருமையில் பேசி அதிகாரிகளை கடுமையாக மிரட்டினார். அப்போது ரேஷன்கார்டு மாற்றம், புதிய ரேஷன்கார்டு விண்ணப்பிக்க வருபவர்களை அலைக்கழிக்கப்படுவதாகவும், ரேஷன் கார்டு விண்ணப்பத்துக்கு ரூ.5 ஆயிரம் அதிகாரிகள் சிலர் பணம் வாங்குவதாக புகார் வந்துள்ளது என கூறினார்.
தொடர்ந்து அதிகாரிகளை கடிந்துகொண்ட அமைச்சர் நமச்சிவாயம், சட்டமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரத்தை சமாதானப்படுத்தி அழைத்து சென்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற பல்கலைக்கழக விழாவில், மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை எனக் கூறி, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மேடையில் துணை வேந்தர் குர்மித் சிங்கிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.