உலகின் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் முழுமையாகக் கைப்பற்றப் போவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே ஒருவழியாக ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக எலான் மஸ்க் ஆகியுள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான கையோடு ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், CEO பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டனர்.மேலும் கிட்டத்தட்ட 50 % ட்விட்டர் ஊழியர்களுக்கு பணிநீக்க செய்தி அனுப்பப்பட்டது. எலான் மஸ்க்கின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்துனர்.
இதனிடையே ட்விட்டரை கைப்பற்றிய கையோடு இனி ட்விட்டரில் 'ப்ளூடிக்' பெற மாதம் இந்திய மதிப்பில் ரூ.719 சந்தா கட்ட வேண்டும் என எலான் மஸ்க் அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்புக்கும் எதிர்ப்பு எழுந்தது. ஆனாலும் தனது முடிவில் எலான் மஸ்க் பின்வாங்காமல் இருந்தார். மாத சந்தா செலுத்தக் கூடிய யார் வேண்டுமானாலும் ப்ளூ டிக் பெறலாம் என மஸ்க் திருத்தம் செய்திருந்ததால் சந்தா கட்டிய எல்லாருக்கும் எந்த சரிபார்ப்பும் இல்லாமல் ப்ளூ டிக் வழங்கப்பட்டது.
ஆனால் முன்னணி நிறுவனங்கள் மற்றும் பிரபலங்கள் பெயரில் போலி ப்ளூ டிக் கொண்ட கணக்குகள் வலம்வருவது ட்விட்டர் மீதான நம்பிக்கையை குலைத்துள்ளது.அதைத் தொடர்ந்து ப்ளூ டிக்' சந்தா வழங்குவதை டிவிட்டர் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியது.
இது தொடர்பாக எலான் மஸ்க் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், " ப்ளூ டிக் மறுவெளியீட்டை தற்காலிகமாக நிறுத்திவைக்கிறோம். ஒரு போலி நபர் கூட இல்லை, ஆள்மாற்றாட்ட பிரச்சினையை இல்லை என்ற நம்பிக்கை வந்தபின்னர் இதுபற்றி பரிசீலிப்போம்" என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து நிறுத்திவைக்கப்பட்டிருந்த ப்ளூ டிக் சேவை கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. சாதாரண வாடிக்கையாளர்கள் 9 டாலர் கொடுத்ததும் ஐபோன் சந்தாதாரர்கள் 11 டாலர்கள் கொடுத்தும் இந்த சேவையை பெறலாம் என அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தற்போது தனி நபர்கள், அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் என மூன்று நிறத்தில் இந்த டிக் சேவை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மும்பையில் உள்ள அந்தேரி பகுதியை சேர்ந்த ரூபேஷ் சிங் என்பவர் தனி நபர்கள், அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களுக்கு தனித்தனி நிறத்தில் வண்ண நிறங்கள் என்ற தனது ஐடியாவை எலான் மஸ்க் திருடிக்கொண்டார் எனவும், இதனால் தனது நஷ்டஈடு வழங்கவேண்டும் என்றும் அவர் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளார்.