இந்தியாவில் சமீபகாலமாகவே திருமண நிகழ்ச்சியில் நடனமாடும் போதும், ஜம்மில் பயிற்சி செய்யும் போது இளைஞர்கள் பலருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
கடந்த மாதம் மத்திய பிரதேசத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த ஒருவர் மயங்கி கீழே விழுந்து மாரடைப்பால் உயிரிழந்தார். இதேபோன்று தற்போது தெலங்கானாவில் போலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் தெகந்தராபாத் ஆசிப் நகரில் உள்ள காவல்நிலையத்தில் கான்ஸ்டபிளாக இருந்துவந்தவர் விஷால். இவர் மொரட்பள்ளி அருகே உள்ள ஜிம்மில் தினமும் உடற்பயிற்சி செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இவர் ஜிம்மில் சுருண்டு விழும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
சமீபகாலமாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது மாரடைப்பு ஏற்பட்டு இளைஞர்கள் பலர் இறக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த 2021ம் ஆண்டில் கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் ஜிம்மில்தான் உயிரிழந்தார். அதேபோல் 2022ம் ஆண்டு நடிகர் சித்தாந்த் வீர் சுர்ரியவன்ஷி, ராஜூ ஸ்ரீவஸ்தவா ஆகியோரும் உடற்பயிற்சி செய்யும் போதுதான் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.