மத்திய தரைக்கடல் பகுதியில் ஐரோப்பாவையும், ஆசியாவையும் இணைக்கும் இடத்தில துருக்கி நாடு அமைந்துள்ளது. அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் இந்த பகுதியில் கடந்த 6-ம் தேதி அந்நாட்டு நேரப்படி அதிகாலை 4.17 மணிக்கு காசியானதெப் எனும் இடத்தில் ரிக்டர் அளவுகோலில் 7.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் நொடியில் தரைமட்டமான நிலையில், இடிபாடுகளில் ஏராளமான பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர். அதிகாலை நேரம் என்பதால் ஏராளமானோர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் இந்த நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்டனர்.பூமிக்கு அடியில் 17.9 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் சிக்கி தற்போது வரை 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி - சிரியா எல்லை அருகே அமைந்துள்ளதால் சிரியா நாட்டிலும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் லெபனான், சிரியா, ஸைப்ரஸ், இஸ்ரேல் உள்பட்ட நாடுகளில் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அதே நாளில் இந்திய நேரப்படி மாலை 3.54 அளவில் 7.5 என்ற ரிக்டர் அளவுகோலில் மீண்டும் அங்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். மேலும் தற்போது வரை அங்கு சிறிய அளவில் நிலநடுக்கம் தொடர்ந்து கொண்டிருப்பதால் ஏற்கனவே சேதமடைந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்து வருகிறது.
தற்போதுவரை துருக்கியில் உள்ள 11 மாகாணங்களில் 6,042 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.இதில் 40 நிலநடுக்கம் 5 முதல் 6 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளதாகவும், அதில் ஒன்று 6.6 ரிக்டர் என்ற அளவில் சக்கிவாய்ந்த நிலநடுக்கமாக பதிவாகி உள்ளது என்றும் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கத்துக்கு கண்ட நகர்வே காரணம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
துருக்கி அமைந்திருக்கும் அனடோலியன் தட்டு அரேபியன் தட்டோடு அடிக்கடி மோதிக்கொள்வதால் இது போன்ற நிலநடுக்கங்கள் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்துக்கும் இதுவே காரணமாக இருந்துள்ளது. அதோடு வரும்காலங்களிலும் இதுபோன்ற நிலநடுக்கங்கள் நிகழலாம் எனவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், தேசிய புவி இயற்பியல் ஆய்வுக் கழகத்தின் தலைமை விஞ்ஞானி என்.பூர்ண சந்திர ராவ் என்பவர் இந்திய கண்டத் தட்டு ஆண்டுக்கு 5 செ.மீ. நகர்ந்து கொண்டே இருக்கிறது, இதனால் மிக மோசமான நிலநடுக்கம் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், நில நடுக்கங்கள் ஏற்படக் காரணம் கண்டத் தட்டுகள் நகருவதால்தான். இந்திய கண்டத் தட்டு அல்லது டெக்டோனிக் பிளேட் என்பது ஆண்டுக்கு 5 செ.மீ. நகர்ந்து கொண்டே இருக்கிறது. இது இந்தியாவில் மிகப் பெரிய நிலநடுக்கத்துக்கான சாத்தியங்களை அதிகப்படுத்தி இருக்கிறது.
இதன் காரணமாக இமயமலையில் நேபாளத்தின் வடக்கு மற்றும் இந்தியாவின் இமாச்சல பிரதேச மாநிலம் இடையே பெரும் இடைவெளி உருவாகிக் கொண்டிருக்கிறது. இது உத்தரகாண்ட்டில் மிக மோசமான நிலநடுக்க பாதிப்பை எந்த நேரத்திலும் ஏற்படுத்தலாம்" எனக் கூறியுள்ளார். இதற்கு முன்னதாக துருக்கி நிலநடுக்கத்தை முன்னரே கணித்த டச்சு ஆய்வாளர் ஹூக்ர்பீட்ஸ் இந்தியாவில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.