ஆண்டுதோறும் உலகம் முழுவதும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. காதலை போற்றும் விதமாக கொண்டாடப்பட்டு வரும் இந்த தினம், அனைத்து தரப்பில் இருந்தும் வரவேற்பு மிக்க ஒரு தினமாக கருதப்படுகிறது.
இந்த தினத்தில் காதலர்கள் தங்கள் காதல்களை தங்களுக்கு பிடித்த வகையில் பரிமாறி கொள்வர். சிலர் தங்கள் காதலன் / காதலிக்கு பரிசு கொடுப்பர்; டேட்டிங் செய்வர்..இப்படி சிலர் தங்களுக்கு பிடித்தவாறு காதலை வெளிப்படுத்தி காதலர் தினத்தை கொண்டாடுவர்.
இது ஒருபக்கம் இருக்க, காதலர் தினம் என்றாலே பிற்போக்கு அரசியலில் ஈடுபடும் சிலர் தங்களை பிஸியாக காட்டிக்கொள்வார்கள். குறிப்பாக, ‘காதலர்களை அவமானப்படுத்துகிறேன்’ என்று திரியும் பேர்வழிகள் நாய்களுக்கு கல்யாணம் செய்து வைப்பது, பொது இடங்களில் ஜோடிகளை பார்த்தால் திருமணம் செய்து வைப்பதாக சொல்லி மிரட்டுவது, பெற்றோருக்கு தொலைபேசியில் அழைப்பது போன்று எதையாவது செய்து விளம்பரம் தேடுவதையே வாடிக்கையாக வைத்துக்கொண்டு சுற்றித்திரிவார்கள்.
இதில் வட மாநிலங்களில் உள்ள இந்துத்வா கும்பலின் அட்டகாசம் பெரும் பரபரப்பையே ஏற்படுத்திவிடும். அந்த வகையில் வடமாநிலத்தில் இந்த ஆண்டும் இந்துத்வா கும்பல் காதலர் அதிகம் கூடும் பூங்கா போன்ற இடங்களில் காதலர்களை மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டது.
அதிலும் ஹரியானாவில் காதலர் தினத்தன்று தனது மனைவியோடு பூங்காவில் அமர்ந்திருந்த இளைஞர் ஒருவரை பஜ்ரங் தல் என்ற இந்துத்துவ அமைப்பினர் தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹரியானா மாநிலம் பரீதாபாத்தில் காதலர் தினத்தன்று இளைஞர் ஒருவர் தனது மனைவிவோடு பூங்கா ஒன்றில் அமர்ந்திருந்துள்ளார்.
அப்போது அந்த பகுதிக்கு வந்த பஜ்ரங் தல் என்ற இந்துத்துவ கும்பல் ஒன்று அவர்களை காதலர்கள் என நினைத்து மிரட்டல் விடுக்கும் விதத்தில் செயல்பட்டுள்ளது. ஆனால், இந்த செயல்களை அந்த இளைஞர் தட்டிக்கேட்ட நிலையில், ஆத்திரமடைந்த அந்த கும்பல் இளைஞரை சரமாரியாக தாக்கியுள்ளது. இதில் அந்த இளைஞர் படுகாயமடைந்தாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.