இந்தியாவின் அரியானா மாநிலத்தின் ஆறாம் மிகப்பெரிய நகரம்தான் குருகிராம். இது டெல்லி அருகே அமைந்துள்ளது. எனவே இங்கு வேலைக்கு அடிக்கடி ஆட்கள் தேவை என்று விளம்பரம் செய்யப்படும். அதோடு பெரிய நகரமான இந்த பகுதி அருகே ஐடி உள்ளிட்ட பல துறைகளில் மக்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த பகுதியை சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் பொறியாளர் முடித்து வேலை தேடியுள்ளார். இதற்காக ஆன்லைனில் பல்வேறு தளங்களில் விண்ணப்பத்துள்ளார். மேலும் அதில் இருக்கும் மொபைல் எண்ணையும் தொடர்பு கொண்டு வேலை கேட்டுள்ளார்.
இளம்பெண் செய்த போன் காலை துஷார் சர்மா என்பவர் எடுத்துள்ளார். பின்னர் இருவரும் மொபைல் போனிலே பேசி இந்த பெண்ணை வேலைக்கு எடுப்பதாக கூறியுள்ளார். ஆனால் ஒரு முறை நேரில் நேர்காணல் நடத்த வேண்டும் என்று துஷார் கூறவே, இளம்பெண்ணும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
எனவே அவரை அந்த பகுதியிலுள்ள சஹாரா மாலுக்கு வரும்படி கூறியுள்ளார். பெண்ணும் இதனை நம்பி சம்பவத்தன்று நேரில் வந்துள்ளார். அப்போது இருவரும் நேரில் சந்தித்து பேசிக்கொண்டே மால் பார்க்கிங்கிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கே பெண்ணுக்கு போதை மருந்து கலந்த தண்ணீரை கொடுத்ததால், அவர் மயக்கமடைந்துள்ளார்.
இதையடுத்து அவரை காருக்குள் கொண்டு சென்று அதில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அவரை அங்கேயே விட்டுவிட்டு துஷார் தப்பி சென்றுள்ளார். சில மணி நேரங்களுக்கு பிறகு சுயநினைவுக்கு வந்த பெண், இதுகுறித்து அந்த பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், இவரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
அதோடு குற்றம் நடந்த இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருவதால் பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி காவல் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
வேலைக்கு நேர்காணலுக்கு அழைத்து இளம்பெண் மாலின் பார்க்கிங் பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் குருகிராமில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது