மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தினந்தோறும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. CAA போன்ற கொடூர சட்டங்களை கொண்டு வந்து சிறுபான்மை மக்களை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்துவதற்கான முயற்சியில் பா.ஜ.க ஈடுபட்டுள்ளது.
இது ஒருபுறம் என்றால் மற்றொருபுறம் மத உணர்வுகளைத் தூண்டி இந்துத்வ கும்பல் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. பா.ஜ.க ஆளும் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில்தான் மத மோதல்கள் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது பா.ஜ.க இல்லாத மாநிலங்களிலும் மத மோதல்கள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்று மர்மநபர்களால் தீவைக்கப்பட்டு அதில் ராம் என எழுதப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதாபுரம் மாவட்டத்தில் உள்ள சுக்தவா கிராமத்தில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
5 ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள கிறிஸ்தவ மக்கள் இந்த ஆயலத்தை கட்டி தற்போதுவரை வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த ஆலயத்தில் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள் ஆலயத்தை தீ வைத்து எரித்துள்ளனர். இதில் அங்கிருந்த மேசை, நாற்காலிகள் தீயில் முற்றிலும் சேதமடைந்தது.
இதுமட்டுமின்றி தேவாலயத்தின் சுவரின் அந்த மர்ம நபர்கள் ராம் என்றும் எழுதியுள்ளனர். அதிகாலையில் எழுந்ததும் அங்கிருந்த பொதுமக்கள் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகாரின் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.