சமூக வலைத்தளங்களில் இளைஞர்களை மட்டுமின்றி வயது பாரபட்சமில்லாமல் அனைவர் மத்தியில் பிரபலமடைந்த செயலியாக ஒரு காலத்தில் இருந்தது டிக்-டாக் செயலி. இந்த செயலி மூலம் பாட்டு பாடியும் ,நடனம் ஆடியும் தங்களிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்தி வீடியோக்களை மக்கள் பகிர்ந்து வந்தனர்.
இது ஒரு புறமிருக்க, சிலர் இதனைத் தவறாக உபயோகித்து ஆபாச பதிவுகளையும் பதிவிட்டு வருவதாக கூறியும், பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகவும் கூறி கடந்த 2020ம் ஆண்டு டிக்-டாக் செயலி இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இந்தியாவில் இந்த தடை விதிக்கப்படும்போது இந்தியாவில் மட்டும் 200 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இருந்தனர்.
எனினும் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தற்போது வரை டிக்-டாக் செயலி பிரபலமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் டிக்-டாக் நிறுவனத்தில் பணியாற்றிய பணியாளர்கள் வெளிநாட்டு கிளைகள் மற்றும் அது சார்ந்த பணிகளில் தொடர்ந்து பணிபுரிந்து வந்தனர்.
தற்போதைய நிலையில் இந்தியாவில் மட்டும் 40 ஊழியர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், அவர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக டிக்-டாக் நிறுவனம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 18-ம் தேதிதான் அவர்களுக்கு கடைசி வேலைநாள் எனவும் டிக்-டாக் நிறுவனம் தரப்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் கூகில், அமேசான், மைக்ரோசாப்ட், ட்விட்டர் என ஏராளமான நிறுவனங்கள் பல்வேறு காரணங்களை கூறி தங்கள் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கிவந்த நிலையில், தற்போது பிரபலமான டிக்-டாக் நிறுவனமும் பணியாளர்களை வேலைநீக்கம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.