பாஜக ஆட்சிக்கு வந்த பிறகும் சரி, வருவதற்கு முன்பும் சரி மற்ற மதத்திற்கு எதிராகவும், பெண்களை மட்டம் தட்டியும் பேசும்விதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பெண்களுக்கு பண்பாடு, கலாச்சாரம் முக்கியம் என்றும், அவர்கள் குறிப்பிட்ட உடைகளைதான் அணிய வேண்டும் என்றும் பேசி வருகின்றனர்.
மேலும் பாஜகவை சேர்ந்த தலைவர் ஒருவர், பெண்கள் வேலைக்கு செல்வதால் தான் பாலியல் வன்கொடுமை நடக்கிறது என்றும், 6 மணிக்கு மேல் பெண்கள் வெளியில் சுற்றுவதால் தான் இதுபோன்ற தவறுகள் நிகழ்கிறது என்று கூறினார்.
மற்ற மாநில பாஜகவினர் தான் இப்படி என்றால், தமிழ்நாட்டிலும் சிலர் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாஜக ஆதரவாளரான எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர் குறித்து அருவருக்கத்தக்க வகையில் கருத்து தெரிவித்து பெரும் சர்ச்சையில் சிக்கினார். வலுத்த கண்டங்கள் எழுந்த நிலையில் வழக்கமாக பாஜகவினர் கையாளும் யுக்தியான மன்னிப்பையும் கேட்டார்.
அதோடு உத்தர பிரதேசம், ஹத்ராஸ் பகுதியில் தலித் இளம்பெண் கடுமையாக தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ள விவகாரத்திலும் கூட பாஜகவினர் அந்த பெண்ணை பற்றி அவதூறு பரப்பினர். இப்படியாக பெண்களுக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் பாஜகவினர், தற்போது மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து சிக்கலில் சிக்கியுள்ளார்.
அசாம் மாநிலத்தில் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் சிறார் திருமணம் தடை செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த மாநிலத்திலும் பெண்களுக்கு சரியான வயது வருவதற்கு முன்பு திருமணம் செய்வதையும், கருத்தரிப்பதையும் தடுக்கும் விதமாக புதிய சட்டத்தை கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கவுஹாத்தி பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சர் ஹிந்தா பிஸ்வா சர்மா பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர் "பெண்களுக்காக நம் (அசாம்) மாநில அரசு அநேக திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. மேலும் பெண்களுக்கு எதிரான குழந்தை திருமணம், வன்கொடுமைகளுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
14 வயதுக்கு முன் இருக்கும் குழந்தைகள் திருமணம் செய்தவர்கள் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இன்னும் 5-6 மாதங்களில் குறைந்தது 1000 பேராவது கைது செய்யப்படுவார்கள். 8 வயதுக்கு குறைவான பெண்களுக்கு திருமணம் நடப்பதை குறைத்து தடுக்கவே அரசு கடுமையான சட்டங்களை இயற்றி வருகிறது.
எப்படி, சிறு வயதில் கருத்தரிப்பட்டது ஆபத்தான விஷயமோ, அதேபோல வயது தாண்டி குழந்தை பெற்றுக்கொள்வதும் சரியான செயல் அல்ல. வயது முதிர்ந்து தாயானால் சிக்கல்களும் ஏற்படலாம். அனைத்து விஷயங்களையும் ஒரு குறிப்பிட்ட வயதில் செய்ய வேண்டிய விதத்தில் தான் கடவுள் நமது உடலை படைத்துள்ளார்.
எனவே, பெண்கள் தங்கள் 22 வயதில் இருந்து 30 வயதுக்கு உட்பட்ட காலகட்டத்தில் தாய்மை அடைய வேண்டும். இந்த வயதில் இருக்கும் பெண்கள் திருமணமாகாமல் இருந்தால் விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும்" என்றார்.
பெண்கள் தாங்கள் சுயமாக சம்பாதித்த பிறகே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும், வீட்டிலுள்ள ஆண்களை நம்பி பெண்கள் இருக்க கூடாது என்றும், எனவே ஒரு பெண் வேலைக்கு செல்வது கட்டாயம் என்றும் பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், ஒரு முதலமைச்சர் இப்படி பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பாஜக முதலமைச்சரின் இந்த கருத்துக்கு திருமணம் என்பது பெண்களின் தனிப்பட்ட உரிமை எனவும், இந்த வயதில் திருமணம் செய்ய வேண்டும், குழந்தை பெற வேண்டும் என்று பேசுவது முதலமைச்சரின் வேலையல்ல என்றும் பல பெண்ணிய ஆர்வலர்கள் விமர்சனங்களும் கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர்.