அமேசான், ட்விட்டர், பேஸ்புக் போன்ற பல முன்னணி மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அதிரடியாகப் பணி நீக்கம் செய்து வருகிறது. இது மென்பொருள் நிறுவனங்களில் மட்டும் நடப்பது இல்லை. பல நிறுவனங்களிலும் இதே நிலைதான் இருந்து வருகிறது.
அந்த வகையில் மிகப்பெரிய உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியில் இருந்து 380 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து ஸ்விக்கி நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஸ்ரீஹர்ஷா மஜேட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில்,"நிறுவனத்தின் மறுசீரமைப்பு பகுதியாக 380 ஊழியர்களை ஸ்விக்கி நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். இது வருத்தமான ஒன்று. அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.
உணவு விநியோகத்தின் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. இதனால் லாபம் மற்றும் வருமானம் குறைந்துள்ள காரணத்தாலே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகப்படியான ஊழியர்களை பணியமர்த்தியதால் இந்த பிரச்சனை தற்போது எழுந்துள்ளது.
உள்கட்டுமானம், அலுவலகம் மற்றும் வசதிகள் போன்ற செலவுகளைக் குறைக்க நாங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டோம். எதிர்காலத்திற்கான கணிப்புகளுக்கு ஏற்ப எங்களது ஊழியர்களின் செலவுகளைச் சரியாக அளவிட வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது.
பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 3 முதல் 6 மாத ஊதியம் மொத்தமாக வழங்கப்படும். இது அவர்களின் பதவிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு இருக்கும்" என தெரிவித்துள்ளார்.