பொதுவாகவே வீட்டிற்குள் குரங்குகள் வந்தால் அதை அங்கிருந்து துரத்திவிடவே நாம் முயற்சி செய்வோம். ஆனால் உத்தர பிரதேசத்தில் ஒருவர் தொல்லை கொடுத்த குரங்கைப் பிடித்து அதைக் காவல்நிலையத்திற்குக் கொண்டு வந்து புகார் கொடுத்த வினோத சம்பவம் நடந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பயோராவில் உள்ள கதர் பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து குரங்குகள் தொல்லை கொடுத்து வந்துள்ளது. மேலும் சிறுவர்கள், பெரியவர்கள் என பலரையும் குரங்குகள் கடித்துள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் குரங்கைப் பிடிக்கும் படி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அப்போது போலிஸார் குரங்கைப் பிடிக்க வந்தபோது அங்கு எங்குத் தேடியும் குரங்குகள் கிடைக்கவில்லை. இதனால் போலிஸார் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இதையடுத்து மீண்டும் குரங்குகள் அப்பகுதி மக்களுக்குத் தொல்லை கொடுத்து வந்துள்ளது. வீட்டிற்குள் புகுந்து உணவுப் பொருட்களைச் சாப்பிடுவது, பொருட்களைச் சேதப்படுத்துவது என சேட்டை செய்து வந்துள்ளது.
இந்நிலையில் ஒருவர் வீட்டிற்குள் புகுந்த குரங்கை அந்த நபர் பிடித்த கையோடு காவல்நிலையத்திற்கு இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்துள்ளார். அப்போது போலிஸாரிடம் இந்த குரங்கு தொல்லை செய்வதாக கூறி புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து போலிஸார் அந்த குரங்கை வனத்துறையிடம் ஒப்படைத்து காட்டில் விடும்படி கூறினர்.
பின்னர் அந்த நபர் காவல்நிலையத்தில் இருந்து மீண்டும் நிம்மதியாக வீட்டிற்கு திரும்பி சென்றுள்ளார். தொல்லை கொடுத்த குரங்கைப் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.