இந்தியாவில் பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வேயின் சேவையை நாட்டின் பெரும்பாலான மக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்ததும் பொதுமக்களுக்கு பெரும் பயனுள்ளதாக விளங்கும் ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
மேலும், ரயில்வேயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த பல்வேறு சலுகைகளை நிறுத்தியுள்ளது. ரயில்வேயில் மூத்த குடிமக்கள் ரயில் பயணங்களின்போது சலுகை வழங்கப்பட்டு வந்தது. அதன்படி, பெண் பயணிகளுக்கு 58வயது ஆனவர்களுக்கு 50% பயண சலுகையும், 60வயதான ஆண் பயணிகளுக்கு 40%பயண சலுகையும் அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால், கொரோனா பேரிடர் காரணமாக மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகையை ஒன்றிய அரசு நிறுத்தியது. கொரோனா முடிந்தபின்னர் இது வழக்கம்போல வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுமார் 3 ஆண்டுகளாக சலுகை வழங்கப்படவேயில்லை.
அதனை மீண்டும் வழங்கவேண்டும் என பொதுமக்களும் பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவரும் நிலையில், அதனை ஒன்றிய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த நிலையில், மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த சுயேச்சை எம்.பி. நவ்னீத் ராணா, ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை மீண்டும் எப்போது வழங்கப்படும் என்று நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது கேள்வி எழுப்பியிருந்தாா்.
அதற்கு பதிலளித்த ஒன்றிய ரயில்வே அமைச்சர், அஷ்வினி வைஷ்னவ் கூறுகையில், "பயணிகள் சேவைகளுக்காக, ரயில்வே கடந்த ஆண்டில் ரூ.59,000 கோடி மானியம் வழங்கியுள்ளது. இது மிகப் பெரிய தொகை அதேபோல், ரயில்வே பணியாளா்களுக்கான ஊதியத்துக்காக ரூ.97,000 கோடி, ஓய்வூதியத்துக்காக ரூ.60,000 கோடி, எரிபொருளுக்காக ரூ.40,000 கோடி செலவிடப்பட்டுள்ளது. ரயில் பயணிகளுக்கான புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இப்போதைய நிலையில், நாம் அனைவரும் ரயில்வேயின் நிதி நிலையைத்தான் கருத்தில் கொள்ள வேண்டும். இதனால் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை வழங்கும் திட்டம் இல்லை" என்று கூறியுள்ளார்.