சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக இங்கு உள்ள ஹோட்டல்களில் விதவிதமாக உணவு வகைகளை தயார் செய்து அவர்களுக்கு வழங்குகின்றனர்.
ஆனால் பெரும்பாலான ஹோட்டல்களில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயார் செய்து விற்பனை செய்யப்படுவதாக பரவலாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு ஹோட்டலில் இருந்த கிரில் சிக்கனை எலி ஒன்று கடித்து ருசி பார்க்கும் சம்பவம் அரங்கேறி உள்ளது.
புதுச்சேரி நகரின் மையப் பகுதியான அண்ணா சாலையில் உள்ள ஹோட்டலில் வழக்கம் போல வாடிக்கையாளர்கள் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கடையிலிருந்த கிரில் சிக்கன் எந்திரத்திற்கு உள்ளே இருந்த சிக்கனை எலி ஒன்று கடித்து ருசித்து உண்டு கொண்டிருப்பதை கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
இது தொடர்பாக கடை உரிமையாளரிடம் வாடிக்கையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சிக்கனை எலி சாப்பிடுவதை செல்போனில் வீடியோ எடுத்து சமூகத்தில் பதிவிட்டனர். தற்போது அந்த படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த ஹோட்டலில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.