மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த டிசம்பர் 3-ம் தேதி திருமணம் நடைபெறவிருந்தது. எனவே அவருக்கு மேக் அப் போடுவதற்காக அந்த பகுதியில் பிரபலமான பார்லரான 'மோனிகா மேக் அப் ஸ்டூடியோ'-விற்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்தார். மேலும் அதற்காக 3,500 ரூ. பணமும் வசூலித்துள்ளார் மோனிகா.
இந்த நிலையில் திருமண நிகழ்வன்று மோனிகாவால் வர முடியாத காரணத்தினால், அவரது உதவியாளர் ஒருவரை மேக் அப் போடுவதற்காக மணப்பெண் வீட்டிற்கு அனுப்பியுள்ளார். ஆனால் அவர் மேக் அப் சரியாக போடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கோபப்பட்ட மணப்பெண், உடனே மோனிகாவை தொடர்பு கொண்டு மண்டபத்துக்கு வரும்படி கூறியுள்ளார்.
அதற்கு அவரோ மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் மணப்பெண்ணின் சமூகத்தின் பெயரை கூறி அவதூறாக பேசியுள்ளார். மேலும் மிரட்டலும் விடுத்துள்ளார் மோனிகா. இதனால் கோபமடைந்த மணப்பெண்ணும் அவரது குடும்பத்தாரும் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
அது மட்டுமின்றி மோனிகா, குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை சொல்லி திட்டியதால், அந்த சமூகத்தை சேர்ந்தவர்களும் அவர் மீது புகார் கொடுத்துள்ளனர். இதனால் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனக்கு சரியாக மேக் அப் போடாமல், தனது அழகை கெடுத்து விட்டதால் ஆத்திரமடைந்த மணமகள், இது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ள நிகழ்வு மத்திய பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.