உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத் பகுதியில் அசோடெக் தி நெஸ்ட் சொசைட்டி ஆஃப் கிராசிங்ஸ் ரிபப்ளிக் எனும் அடுக்குமாடி கட்டடம் உள்ளது. இந்நிலையில் இந்த கட்டத்தில் வசிக்கும் 8 முதல் 10 வயதுள்ள மூன்று குழந்தைகள் லிப்ட்டில் சென்றுள்ளனர்.
அப்போது திடீரென இயந்திர கோளாறு காரணமாக லிப்ட் பாதியிலேயே நின்றுள்ளது. இதனால் சிறுமிகள் அதிர்ச்சியடைந்து அலறி துடித்துள்ளனர். பின்னர் பயத்தில் அழுதபடி லிப்ட் கதவைத் திறக்க முயற்சி மேற்கொண்டு பலனளிக்கவில்லை. இறுதியில் ஒரு குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட மற்ற இரு குழந்தைகளும் சமாதானம் செய்ய முயற்சி செய்து ஆறுதல் கூறியுள்ளனர்.
பின்னர், லிப்ட் இவ்வளவு நேரமாக வேலை செய்யாததை அடுத்து தொழில் நுட்ப கோளாறை சரி செய்த பிறகு, லிப்டை திறந்தபோதுதான் அதற்குள் 3 சிறுமிகள் மூச்சுவிடமுடியாமல் இருந்ததைக் கண்டு குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சியடைந்துள்ளார். கிட்டத்தட்டச் சிறுமிகள் 20 - 30 நிமிடங்கள் லிப்டில் இருந்துள்ளனர்.
இதையடுத்து, சிறுமிகளின் பெற்றோர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி காண்போர் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இது தொடர்பாக சிசிடிவி வீடியோ அடிப்படையில் குடியிருப்பு தலைவர் மற்றும் செயலாளர் மீது உத்தர பிரதேச போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது குறித்துப் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் தந்தை கூறுகையில், அடிக்கடி இந்த லிப்ட் பழுதாகிவிடுகிறது. இதை சரிசெய்ய வேண்டும் என கூறியும் குடியிருப்பு நிர்வாகம் இதைக் கண்டுகொள்ளவில்லை. தற்போது சிறுமிகள் லிப்ட்டில் மாட்டிக் கொண்டனர். ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் யார் அதற்குப் பொறுப்பேற்பது என ஆவேசமாகக் கூறியுள்ளார்.