நம்மில் பலருக்கு இரவு 10 மணிக்கு மேல் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் நடந்து செல்லவே அச்சமாக இருக்கும். அதுவும் சுடுகாட்டுப் பகுதியில் செல்லும் போது மனதில் ஒரு சிறிய அச்சம் இருக்கவே செய்யும். இந்த நவீன உலகத்திலும் பேய் பற்றிய கதைகள் வந்துகொண்டேதான் இருக்கிறது.
அதிலும் 12 மணிக்கு மேல் சுடுகாட்டில் பேய் நடமாட்டம் இருக்கும் என நமது பெரியவர்கள் சொன்னதைக் கேட்ட நாமும் வளர்ந்து வந்து விட்டோம். இப்போதும் கூட 12 மணிக்குச் சுடுகாட்டிற்குச் செல்ல வேண்டும் என்றால் பீதி இருக்கவேதான் செய்கிறது.
இந்நிலையில் மகாராஷ்டிராவை சேர்ந்த ஒருவர் தனது 54வது பிறந்த நாளை குடும்பத்துடன் சுடுகாட்டில் கொண்டாடிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் கௌதம் மோர். இவர் தனது 54வது பிறந்த நாளை சுடுகாட்டில் கொண்டாட வேண்டும் என முடிவு செய்துள்ளார். இது குறித்து தனது குடும்பத்தினருடனும் கூறியுள்ளார். இதற்கு அவர்களுக்குச் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கௌதம் மோர் தனது 54வது பிறந்த நாளை சுடுகாட்டில் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். மேலும் பிறந்த நாள் விழாவிற்கு வந்த அனைவருக்கும் பிரியாணி விருந்து கொடுக்கப்பட்டுள்ளது. விழாவிற்கு வந்த அனைவரும் சுடுகாட்டிலேயே பிரியாணி உணவைச் சாப்பிட்டு மகிழ்ச்சியாக அங்கிருந்து சென்றுள்ளனர். இந்த விழாவில் 40 பெண்கள், குழந்தைகள் உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இது குறித்துப் பேசிய கௌதம் மோர்," சுடுகாட்டில் பேய்கள் போன்ற எந்த ஒரு விஷயங்களும் இல்லை என்பதை மக்களுக்கு விழிப்புணர்வு படுத்தவே எனது பிறந்த நாளை இங்கு கொண்டாடினேன். மற்ற இடங்களைப் போன்றதுதான் சுடுகாடும்" என தெரிவித்துள்ளார். இதையடுத்து கௌதம் மோர் சுடுகாட்டில் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.