கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் மோட்டார் வாகனங்களை திருடிய இரண்டு மர்ம கும்பல், நேரா அங்கிருந்து சாத்தனூர் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கே ஒரு வீடு பூட்டியிருப்பதை கண்ட அவர்கள், உள்ளே சென்று தங்கம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்தனர். மேலும் தாங்கள் வந்த வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டு சென்றுள்ளனர்.
இந்த திருட்டு சம்பவம் குறித்து காவல்துறைக்கு கிடைக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்கிருந்த அனைத்து சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் திருடி பேருந்து நிலையம் சென்று, அங்கிருந்து அரசுப் பேருந்தில் தமிழ்நாட்டுக்கு சென்று கொண்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து கேரள போலீசார், தமிழக காவல்துறைக்கு இது குறித்து தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில், தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரை என்ற பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து புளியரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சஞ்சய்காந்தி மற்றும் செங்கோட்டை தனிபிரிவு காவலர் அரவிந்த் தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் புளியரை பகுதியில் உள்ள சோதனை சாவடியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது இருசக்கர, நான்கு சக்கர வாகனம், குறிப்பாக கேரளாவில் இருந்து தமிழகம் நோக்கி வந்த பேருந்துகள் என அனைத்தையும் சோதனையிட்டனர். அந்த சமயத்தில் அங்கு வந்த கேரளா - தமிழ்நாடு அரசு பேருந்தில் சோதனை செய்தனர். அப்போது கேரள போலீசார் சொன்னபடி சந்தேகத்திற்குரிய வகையில் இரண்டு நபர்கள் இருந்துள்ளனர்.
அவர்களிடம் அதிகாரிகள் விசாரித்ததில், இருவரும் மாறி மாறி முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவர்களை அழைத்து சென்று தனியாக விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து அவர்கள் தங்கள் தவற்றை ஒப்புக்கொண்டனர்.
தொடர்ந்து விசாரிக்கையில், அவர்கள் இருவரும் மதுரையை சேர்ந்த பட்டரை சுரேஷ் என்றும், மற்றொருவர் தூத்துக்குடியை சேர்ந்த எட்வின் ராஜ் என்றும் தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்து 36.2 கிராம் மதிக்கத்தக்க தங்க நகைகள் மற்றும் 178.3 கிராம் மதிக்கத்தக்க தங்க முலாம் பூசப்பட்ட கவரிங் நகைகள், ரூ.1,18,350 உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர்கள் இருவரையும் கைது செய்த அதிகாரிகள், இது குறித்து கேரள போலீசுக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் புளியரை வந்த அவர்கள் குற்றவாளிகளை கேரளாவிற்கு கொண்டு சென்றனர். கேரளா போலீசார் தகவலையடுத்து துரிதமாக செயல்பட்ட தமிழ்நாடு காவல்துறைக்கு கேரள காவல்துறை அதிகாரிகள் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.