புனேவைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஸ்மித் மேத்தா. இவர் கடந்த ஜூலை மாதம் தனது நண்பர்களுடன் சேர்ந்து லோனாவாலாவில் உள்ள மலைபகுதியில் ட்ரெக்கிங் செய்துள்ளார். அப்போது சிறுவன் ஸ்மித் மேத்தா தவறுதலாக மலையிலிருந்து 150 அடி கீழே விழுந்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக மரத்தை பிடித்துக் கொண்டுள்ளார். பிறகு உடன் வந்த நண்பர்களும் ஸ்மித் மேத்தா கீழே விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து ஸ்மித் மேத்தா தனது கையில் அணிந்திருந்த ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்சை பயன்படுத்தி நண்பர்கள் மற்றும் உறவினர்களைத் தொடர்பு கொண்டுள்ளார்.
உடனே இது குறித்து போலிஸாருக்கு நண்பர்கள் தகவல் கொடுத்தனர். பிறகு மீட்புக்குழுவினர் விரைந்து வந்து ஸ்மார்ட் வாட்ச் சிக்னலை கொண்டு அவர் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து மீட்டனர். கீழே விழுந்ததில் ஸ்மித் மேத்தாவுக்கு கால் எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
பிறகு ஆகஸ்ட் 7ம் தேதி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். இதையடுத்து தனது உயிரை காப்பாற்ற உதவிய ஆப்பிள் நிறுவனத்திற்கு ஸ்மித் மேத்தா இமெயில் அனுப்பி நன்றி தெரிவித்துள்ளார். இந்த இமெயிலை பார்த்த ஆப்பிள் நிறுவனமும் அவருக்குப் பதில் அளித்துள்ளது. அதில் நீங்கள் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளது. இந்த உரையாடல் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.