இந்தியாவிலேயே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மிக முக்கிய மருத்துவமனையாகப் பார்க்கப்படுகிறது. இங்கு அரசியல் தலைவர்கள் முதல் முக்கிய பல பிரமுகர்கள் சிகிச்சைக்கு வந்து செல்வது வழக்கம். மேலும் அனுபவம் வாழ்ந்த பல மருத்துவர்கள் இங்கு உள்ளனர். இதனால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவனை நோயாளிகளின் பலருக்கு முதல் தேர்வாக இருக்கிறது. மேலும் வட மாநிலங்களில் போதிய அத்தியாவசதியுடன் கூடிய மருத்துவமனைகள் இல்லாததால் பலரும் இங்குச் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 4 வயது சிறுவனுக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான்பூச்சி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சாஹில் ஸைதி என்பவர் படத்துடன் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 4 வயது சிறுவனுக்குக் குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பிறகு அந்த சிறுவனுக்குச் சாப்பிட வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்துள்ளது. இதை அவரது பெற்றோர்கள் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பிறகு உடனே இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெற்றோர்கள் வெளியிலிருந்து உணவை வாங்கி மகனுக்கு கொடுத்துள்ளனர். இது குறித்துப் பேசிய 4 வயது சிறுவனின் தாய், "மகனுக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தோம். பிறகு வெளியே ஆர்டர் செய்து உணவை மகனுக்கு கொடுத்தோம்.
எங்களால் வெளியே உணவு வாங்க முடியும் என்பதால் நாங்கள் சமாளித்துக் கொண்டோம். ஆனால் உணவு வாங்க முடியாதவர்கள் என்ன செய்வார்கள்? எய்ம்ஸ் மருத்துவமனையில் கொடுக்கப்படும் உணவின் தரத்தை முற்றிலுமாக மாற்ற வேண்டும்" என தெரிவித்துள்ளார்.