கேரள மாநிலத்தில் ஏராளமான வடமாநிலத்தவர் கூலி தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். அப்படி மேற்குவங்கத்தில் இருந்து வந்த தொழிலாளர்கள் காசர்கோடு மாவட்டத்தின் காஞ்சங்காடு நகரில் கூலி வேலை செய்து வந்தனர்.
அதில் ஒரு 25 வயதுடைய வாலிபர் கடைவீதியில் சென்றுகொண்டிருந்த பெண் அணிந்திருந்த செயினை பறித்து விரைவாக ஓடியுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் அந்த இளைஞரை துரத்தி சென்றுள்ளனர். தன்னை துரத்தி வருபவர்களை பார்த்து அதிர்ச்சியடைந்த திருடன் அவர்களிடமிருந்து தப்பிக்க திட்டமிட்டுள்ளார்.
இதற்காக சாலையில் இருந்து மின்கம்பத்தில் அந்த திருடன் ஏறியுள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் இதுகுறித்து மின்துறை அலுவலர்களிடம் புகார் அளிக்க அவர்கள் அந்த மின்கம்பத்தில் மின் இணைப்பைத் துண்டித்த்துள்ளனர். மேலும் தகவல் அறிந்து போலிஸாரும்,தீயணைப்புத்துறையினரும் அந்த இடத்துக்கு வந்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து போலிஸாரும்,தீயணைப்புத்துறையினரும் அந்த திருடனை பிடிக்க முயல தனது சட்டையைக் கழட்டிய திருடன் அதனை தனது கைகளில் சுற்றிக் கொண்டு உயர் மின் அழுத்த கம்பியில் நடந்து போலிஸாரின் கைகளில் சிக்காமல் தப்பியுள்ளார். உடனே போலிஸும், பொதுமக்களும் கம்பு மற்றும் கற்கள் கொண்டு அந்த திருடனை தாக்கியுள்ளனர்.
பின்னர் இரு மின் கம்பியிலும் ஏறிய போலிஸார் மின்கம்பத்தை பிடித்து அசைத்துள்ளனர். இதில் நிலைதடுமாறி கீழே விழப்போன அந்த திருடனின் கால்களை பிடித்த போலிஸார் ஒரு வழியாக இறுதியில் அவரை கைது செய்தனர். இந்த சம்பவத்தை அங்கிருந்த பொதுமக்கள் வெகுநேரம் வேடிக்கை பார்த்தபடி இருந்தனர்.