ஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே தொங்கு பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த பாலம் 100 ஆண்டுகளுக்குப் பழமையானது. இதனால் இந்த பாலத்தைப் பார்வையிடத் தினந்தோறும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
இந்த பாலம் பழுதடைந்ததால் சில மாதங்களுக்கு முன்பு மறுசீரமைக்கப்பட்டு மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்குக் கடந்த 5 நாட்களுக்கு முன்புதான் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு இந்த பாலத்தில் குழந்தைகள், பெரியவர்கள் என குடும்பத்துடன் 500க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் பாலத்தில் இருந்துள்ளனர்.
அப்போது திடீரென பாலம் இரண்டாக அறுந்து ஆற்றில் விழுந்துள்ளது. இதனால் பாலத்தின் மீது நின்றிருந்த பலரும் தண்ணீரில் விழுந்து மூழ்கினர். மேலும் சிலர் அறுந்து விழுந்த பாலத்தின் கழிறுகளை பிடித்து தொங்கிக் கொண்டிருந்தனர். இந்த பயங்கர சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாக நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து உடனே பேரிடர் மீட்பு குழுவினர், போலிஸார் அப்பகுதி மக்கள் என அனைவரும் சேர்ந்து மீட்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இது வரை 132 பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். 93 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 84 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் இந்த பாலத்தைப் பராமரித்து வந்த தனியார் நிறுவனமான ஓரேவா குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலத்தின் நடுப்பகுதியிலிருந்த பலர் ஒரு வழியிலிருந்து மற்றொரு வழிக்கு ஒரே நேரத்தில் மாற முயற்சித்ததால் பாலம் இடிந்து விழுந்துள்ளது என கூறியுள்ளது.
அதேபோல், பாலத்தை பராமரித்து வந்த ஓரேவா குழுமம் எங்களுக்குத் தெரிவிக்காமல் பாலத்தைப் பார்வையாளர்களுக்குத் திறந்துவிட்டுள்ளது. இதனால் எங்களால் பாலத்தின் பாதுகாப்பை தணிக்கை செய்ய முடியவில்லை என மோர்பி நகராட்சி நிர்வாகம் குற்றச்சாட்டு வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழுவைக் குஜராத் அரசு நியமித்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,"குஜராத் மாநிலம் மோர்பியில் கேபிள் பாலம் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் பல அப்பாவி உயிர்கள் பறிபோயிருப்பதை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். உற்றாரை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விபத்தில் காயமடைந்தவர்கள் விரைந்து நலம்பெற விழையும் அதேவேளையில், ஆற்றில் சிக்கி உயிருக்குப் போராடி வரும் எஞ்சியோர் விரைந்து பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.