இந்தி தேர்வில் தோல்வியடைந்ததால் பள்ளி மாணவர் ஒருவரை ஆசிரியர் ஒருவர் பிரம்பால் அடித்து கொன்ற சம்பவம் உத்தர பிரதேசத்தில் அரங்கேரியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டா பகுதியை அடுத்துள்ள பாடல்பூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் 12 வயதுடைய சிறுவன். இவர் அந்த பகுதியிலுள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். அவரது வகுப்பு ஆசிரியராக ஷோபரன் என்ற 42 வயதுடைய நபர் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், அந்த மாணவன் சமீபத்தில் நடந்த இந்தி தேர்வில் தோல்வியுற்றுள்ளார். இதனால் மாணவனை கண்டிப்பதற்காக ஆசிரியர் பிரம்பால் தாக்கியுள்ளார். அதில் ஆசிரியர் மாணவனை கடுமையாக தாக்கியதில், சிறுவன் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்துள்ளார்.
மயக்கமடைந்த சிறுவனை பதற்றத்துடன் சக ஆசிரியர்கள் சேர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். அதோடு சிறுவனை கடுமையாக தாக்கியதாக சிறுவனின் உறவினர்கள், பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் பள்ளி நிர்வாகமும் இதற்கு முறையாக விளக்கம் அளிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.
அதோடு இது குறித்து காவல்துறையிலும் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், பெற்றோர்களின் போராட்டத்தை கைவிடுமாறும் வலியுறுத்தினர். பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மேலும் மாணவனை தாக்கிய ஆசிரியரே, மாணவனுக்கு உதவி செய்து வந்ததாக காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி மாணவரின் குடும்பத்திற்கும் சம்மந்தப்பட்ட ஆசிரியர் பண உதவி செய்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வந்த மாணவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவன் இறந்த செய்தியை அறிந்த ஆசிரியர் தலைமறைவாகியுள்ளார். பின்னர் அவரை தீவிர தேடி வந்த காவல்துறை தாத்ரி பைபாஸ் அருகே வைத்து ஆசிரியரை கைது செய்தனர்.
மருத்துவ பரிசோதனை அறிக்கையின்படி, ஆசிரியர் அடித்ததில் மாணவரின் மூளையில் ரத்தம் உறைந்திருப்பதாகவும், நரம்பின் சிதைவு காரணமாக இறந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பித்தக்கது. இந்த நிகழ்வு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.