தற்போதுள்ள இணைய உலகில் அனைத்தும் இணையத்தின் மூலம் எளிதில் செய்துவிடும் சூழ்நிலை உள்ளது. அந்த வகையில் ஹோட்டல், சூப்பர் மார்க்கெட், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பிரதானமான கடைகளில் கூகுள் பே, போன் பே உள்ளிட்ட வசதிகள் மூலம் பணம் செலுத்த முடிகிறது.
அந்த வகையில் தற்போது கூகுள் பே மூலம் பெட்ரோலுக்கு 500 ரூபாய் பணம் செலுத்துவதற்கு பதிலாக 55 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தானே என்ற பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில், அந்த பகுதி வாசி ஒருவர் பெட்ரோல் போட சென்றுள்ளார். அப்போது தனது ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு 500 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டவர், அதற்கான தொகையை GPay மூலம் செலுத்தியுள்ளார்.
அப்போது அந்த பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் ஊழியர் 550 ரூபாய்க்கு பதில் 55,053 ரூபாய் என பதிவிட்டிருக்கிறார். இதனை அந்த நபரும் கவனிக்காமல் பாஸ்வேர்டு கொடுத்து ஓகே கொடுத்திருக்கிறார். அதன் பின்னர் 55 ஆயிரம் ரூபாய் டெபிட் ஆனதாக அவரது எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்த அவர் அந்த ஊழியரிடம் கேட்டுள்ளார்.
அவரால் முறையான பதிலை சரிவர கூறமுடியாததால், இந்த விவகாரம் அந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அவர்கள் விசாரித்ததில் ஊழியர் மேல் தவறு என்று தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சம்பவம் நடந்த நாளே, அவரது வங்கிக்கு உரிய தொகை முழுவதும் திருப்பி அனுப்பப்பட்டது.
500 ரூபாய் பெட்ரோலுக்கு மாறாக 55 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.