ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் உள்ளது கோபிகந்தர் பஹாரியா ரெசிடெண்ட்சியல் பள்ளி. இந்த பள்ளியில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த பள்ளியில் உள்ள 9-ம் வகுப்பிற்கு குமார் சுமன் என்பவர் கணித ஆசிரியராக இருந்து வருகிறார். 9-ம் வகுப்பிற்கு அண்மையில் practical தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் வகுப்பிலுள்ள 36 மாணவர்களில் 11 மாணவர்கள் Fail ஆகியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் தங்களை Fail செய்த கணித ஆசிரியர் குமார் சுமனை மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர்களுடன் அந்த பள்ளியில் கிளார்க்காக இருக்கும் சுனிராம், அசிண்டோ உள்ளிட்ட இருவரையும் சேர்த்து அங்கிருந்த மாங்காய் மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். இதில் வலி தாங்காமல் அலறி துடித்த ஆசிரியர்களின் சத்தத்தை கேட்டு வந்த சக ஆசிரியர்கள் இது குறித்து காவல்துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலறிந்து விரைந்து வந்த அதிகாரிகள் பிரச்னையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை பள்ளி நிர்வாகம் நீக்கியுள்ளது. மேலும் இதனால் மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் பள்ளி நிர்வாகம் புகார் தெரிவிக்கவில்லை என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.