உத்தர பிரதேசத்தின் முசாபர்நகர் அருகே இருக்கும் கிராமம் தாஜ்பூர். இந்த கிராமத்தின் தலைவராக இருப்பவர் சக்தி மோகன் குர்ஜார். இந்த கிராமத்தின் அருகில் இருக்கும் கிராமம் ரீட்டா நக்லா. இந்த கிராமத்தின் முன்னாள் தலைவர் கஜே சிங்.
இந்த நிலையில் சக்தி மோகன் குர்ஜாரும், கஜே சிங்கும் சேர்ந்து தினேஷ் குமார் என்ற தலித் இளைஞரை காலணிகளை கொண்டு தாக்கியுள்ளனர். அந்த பகுதி பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த தாக்குதலை அங்கிருந்த கிராம தலைவரின் ஆட்கள் வீடியோ எடுத்துள்ளனர்.
பின்னர் தங்கள் சாதி வலிமையை காட்ட அந்த கிராம தலைவர்களே அதை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். மேலும், அந்த தலித் இளைஞருக்கு அந்த கிராம தலைவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், சாதி ரீதியாக விமர்சித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக நிலையில், சந்திரசேகர் ஆசாத்தின் பீம் ஆர்மி கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்னொருவரை போலிஸார் தேடி வருகின்றனர். மேலும் அவர்கள் மீது எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.