மிசோரம் மாநிலத்தில் ஜோரம்தங்கா தலைமையில் மிசோ தேசிய முன்னணி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்றைய முன்தினம் முதலமைச்சர் ஜோரம் தங்காவின் மகள் மிலாரி சாங்டே என்பவர், அய்சால் என்ற பகுதியிலுள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கே தோல் மருத்துவ நிபுணரிடம் பரிசோதனை மேற்கொள்ள சென்றுருந்தார்.
அங்கே சென்ற அவர், முன்பதிவு இல்லாமல் உள்ளே சென்றதால் 'யாராக இருந்தாலும் முன்பதிவு இல்லாமல் பார்க்கமாட்டேன்' என்று மருத்துவர் அவரை சந்திக்க மறுத்துள்ளார். மேலும் வெளியே முன்பதிவு பெற்று பல மணி நேரமாக காத்திருக்கும் நோயாளிகளுக்கு வரிசையாக சிகிச்சை அளித்தும் வந்துள்ளார் அந்த மருத்துவர்.
இதனால் ஆத்திரமடைந்த மிலாரி, உள்ளே வேகமாக சென்று அந்த மருத்துவரை கடுமையாக தாக்கியுள்ளார். முதலமைச்சர் மகள் மருத்துவரை தாக்கியதால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இது தொடர்பான காட்சிகளை அங்கிருந்தவர்கள் தங்களது மொபைல் போன்களில் படம் பிடித்தனர். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவதுடன் பல்வேறு தரப்பினர் கண்டங்களும் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தாக்கிய பெண்ணின் தந்தையும், முதலமைச்சருமான ஜோரம்தங்கா தனது மகளின் செயலுக்காக மன்னிப்பு கோரியுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தோல் மருத்துவரிடம் எனது மகள் தவறாக நடந்ததற்காக பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன்.
நாங்கள் குடும்பத்துடன் மருத்துவர் வீட்டுக்கு சென்று மன்னிப்பு கேட்டோம். அவர்கள் மிகவும் புரிந்துகொள்ளும் தன்மையுடைவர்களாக இருக்கின்றனர். எனது மகளின் இந்த செயலை எந்த வகையிலும் நியாயப்படுத்த மாட்டேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.