ஆந்திர மாநிலம் ஹைதராபாத் பகதூர்பூர் பகுதியை சேர்ந்தவர் அகமது (வயது 30) என்பவரும் பாகிஸ்தானில் உள்ள பைசலாபாத்தை சேர்ந்த கதியா நூர் (வயது 26) என்ற பெண்ணும் சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமாகியுள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இவர்கள் திருமணம் செய்ய முடிவெடுத்து ஹைதராபாத்தில் திருமணம் செய்யலாம் என்று தீர்மானித்துள்ளனர். இதற்காக அகமது தன் சகோதரர் முகமதுவின் உதவியை நாடியுள்ளார். மேலும், கதியாவை இந்தியா வரவழைக்க இருவரும் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, நேபாளத்தில் உள்ள அகமதுவின் நண்பர் ஜீவனின் உதவியை இவர்கள் நாடியுள்ளனர். அதன்படி கதியா பாகிஸ்தானில் இருந்து நேபாளம் வந்து அங்கிருந்து இந்தியா வர திட்டமிட்டுள்ளனர். அந்த திட்டத்துக்கு ஜீவனும் உதவியுள்ளார்.
இவர்களின் திட்டத்தின்படி கடந்த 8-ம் தேதி கதியா பாகிஸ்தானில் இருந்து நேபாளம் வந்து அங்கு ஜீவனை சந்தித்துள்ளார். பின்னர் அங்கிருந்து பீகார் வழியாக இருவரும் இந்தியாவுக்குள் நுழைய முயன்றுள்ளனர். அப்போது எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் ஒருவரின் அடையாள அட்டையை சோதனை செய்துள்ளனர்.
இந்த சோதனையின்போது கதியாவின் அடையாள அட்டை போலியானது என்பது தெரியவந்துள்ளது. இதன்பின்னர் அவரிடம் விசாரித்தபோது தனது காதல் கதையையும், காதலரை திருமணம் செய்ய இந்தியா வரமுயன்றதையும் கதியா கூறியுள்ளார்.
எனினும் பாகிஸ்தானின் இருந்து அவர் வந்ததால் அவர் பின்னணியில் தீவிரவாத இயக்கம் ஏதும் இருக்குமா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். இதற்கு முன்னர் இந்திய காதலரை திருமணம் செய்ய வங்கதேசத்தில் இருந்து ஆற்றில் குதித்து இந்திய வந்த பெண் கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.