பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பா.ஜ.க அரசு, பிற மொழிகளை தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.
இது தவிர ஒன்றிய அரசின் அலுவலங்களில் இந்தியை பயன்படுத்த சொல்வது, அலுவல் பூர்வ கடித பரிமாற்றம் போன்றவற்றுக்கு ஆங்கிலத்துக்கு பதில் இந்தியை பயன்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
நாடாளுமன்றத்தில் பிற மாநில அமைச்சர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஆங்கிலம் தெரிந்த அமைச்சர்கள் கூட இந்தியில் பதில் சொல்வதும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கல்வியில் இந்தி, ரயில்வே துறையில் இந்தி என எங்கும் இந்தி, எதிலும் இந்தி என்ற கொள்கையை ஒன்றிய அரசு பின்பற்றுவது பிற மாநில மக்கள் இடையே மொழி ரீதியான அச்சத்தை ஏற்படுத்துகிறது.
சமீபத்தில் இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களில் உள்ள விசாரணை மற்றும் உதவி மையங்களின் பெயர்களை இந்தி மொழியில் மாற்றம் செய்யஒன்றிய அரசு உத்தரவிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து நிறுவனத்தை பல்கலைக்கழகமாக மாற்றி அதற்கு 'கதி சக்தி விஸ்வ வித்யாலயா' என இந்தியில் பெயர் மாற்ற ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு தென்மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தி.மு.க எம்.பி. ராஜேஷ்குமார் நாடாளுமன்றத்தில் இந்த நிகழ்வுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். நேற்று மத்திய பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அதில் பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து நிறுவனத்தை இந்த சட்டத்தின் கீழ் பல்கலைக்கழகமாக கருதுவதை வரவேற்பதாகவும், ஆனால் அதேநேரம் இந்திய ரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகம் என்ற பெயரை' கதி சக்தி விஸ்வ வித்யாலயா' என மாற்றுவது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இப்படி இந்தியில் பெயர் மாற்றினால் அதனை எல்லா மாநில மக்களாலும் புரிந்து கொள்ள முடியாது என்றும், குறிப்பாக தமிழக, கேரளா போன்ற மாநிலங்களில் அது யாருக்கும் புரியாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், 'கதி சக்தி விஸ்வ வித்யாலயா' என்ற இந்தி பெயருக்கு பதில் இந்திய ரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகத்தின் பெயரை ஆங்கிலத்தில் மாற்றவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.