பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். நாடு முழுவதும் மதச் சண்டை, சாதிச் சண்டைகள் ஒரு புறம் நடந்து வந்தால், மற்றொரு புறம் விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகள் எழுந்து வருகிறது.
குறிப்பாக, பெட்ரோல், டீசலின் கடுமையான விலை உயர்வு, பொதுமக்களை பெருமளவில் பாதித்துள்ளது. என்னதான கச்சா பொருட்களின் விலை சந்தையில் குறைந்தாலும், பெட்ரோல், டீசலின் விலை குறைவதே இல்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் என்ற பகுதியில், அரசு விழா ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய அவர், மாநில போக்குவரத்து கழகங்கள், மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளுக்கு மாறினால், டிக்கெட் விலை 30 சதவீதம் குறையும் என்று தெரிவித்தார்.
மேலும், தற்போது இருக்கும் நிலையில், போக்குவரத்து கழகங்கள் ஒருபோதும் லாபம் பார்க்க முடியாது என்று கூறிய அவர், அவை அனைத்தும் டீசலில் இயங்கி வருவதே அதற்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசலின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதை தான், நிதின் கட்காரி சூசகமாக தெரிவித்துள்ளதாக, பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர்.
விலைவாசி அதிகரிப்பால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், அதை சரி செய்ய வேண்டிய பொறுப்பில் இருக்கும் அமைச்சரே இவ்வாறு கூறியிருப்பது, பா.ஜ.க-வினர் மத்தியில் பெரும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.