மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராம்ராவ் பட். தொழிலதிபரான இவர் வெளியே சென்று ஓட்டலில் சாப்பிடலாம் என கூறி தனது மனைவி, மகனை காரில் அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்குச் சென்ற பிறகு ராம்ராவ் காரை நிறுத்தியுள்ளார். பிறகு திடீரென காரில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து மனைவி, மகன் மற்றும் தன்மீதும் ஏற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டுள்ளார்.
இதில் மூன்று பேரும் காரோடு சேர்ந்து எரிந்துள்ளனர். இதைப்பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பிறகு அங்கு வந்த போலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
இதையடுத்து தீக்காயம் அடைந்த மனைவி மற்றும் மகனைமீட்டு மருத்துவமனையில் போலிஸார் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். ஆனால் ராம்ராவ் பட் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளார்.
மேலும் ராம்ராவ் பட் தற்கொலைக்கு முன்பு எழுதி கடிதம் ஒன்றை போலிஸார் மீட்டுள்ளனர். அதில் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்வதாக எழுதி இருந்ததாக போலிஸார் தெரிவித்துள்ளனர். கடன் தொல்லை காரணமாக குடும்பத்தையே காரோடு சேர்த்து தொழிலதிபர் எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.