உத்தர பிரதேச மாநிலம் நொய்டா அருகே உள்ள படாவுன் பகுதியை சேர்ந்தவர் விகாஷ். இவர் கடந்த ஜூலை 14 ஆம் தேதி, மாமுரா பகுதியில், ஒரு ஹோட்டல் அருகே நின்றுகொண்டிருந்த பெண் ஒருவரின் மீது ஆசிட்டை வீசி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த பெண், அலறி துடிதுடித்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தவலறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த காவல்துறையினர், இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி, அதே பகுதியில் வழக்கமான சோதனையில் ஈடுபட்ட காவல் அதிகாரிகள், ஒவ்வொரு வாகனத்தையும் சோதனையிட்டனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் அங்கு வந்த இளைஞர் ஒருவர், காவல்துறையினரை பார்த்ததும் தப்பிக்க முயற்சித்துள்ளார்.
பின்னர் அவரை பிடிக்க முயன்ற காவல் அதிகாரிகள் மீது, அந்த நபர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் தாக்கியுள்ளார். இதனால் வேறு வழியில்லாத காவல்துறையினர் அந்த நபர் மீது பதில் தாக்குதலாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த மோதலில் பைக்கில் சென்ற நபரின் காலில் குண்டடிபட்டது. இதையடுத்து அவரை பிடித்து விசாரிக்கையில் மாமுரா பகுதியில் நடைபெற்ற ஆசிட் தாக்குதலில் ஈடுபட்ட நபர் இவர் என்பதும் அவர் பெயர் விகாஷ் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து ஆசிட் வீச்சு குறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஆசிட் தாக்குதலுக்கு உள்ளான பெண்ணுக்கும், இவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதாகவும், தற்போது அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டதால் அவர் மீது ஆசிட் வீசியதாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் விகாஷ் சொல்வது போல், அவர்கள் இருவரும் கணவன் - மனைவி தானா ? அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் மீது ஆசிட் ஊத்தி சென்ற நபரை காவல்துறையினர் சுட்டு பிடித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.