கர்நாடக மாநிலத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே வெள்ளம் சூழ்ந்து காணப்படும் நிலையில், அங்குள்ள காவிரி, நேத்ராவதி, குமாரதாரா, சௌபர்ணிகா, பால்குனி, நந்தினி ஆகிய ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த கனமழை காரணமாக இதுவரை 15 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எனவே கர்நாடகா மாநிலத்திலுள்ள கடலோர மாவட்டங்களுக்கு அடுத்த இரண்டு நாட்கள் கனமழை எச்சரிக்கை என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே கடந்த 11 நாட்களாக ஒரு கடலோர கர்நாடகா மாவட்டங்களான உத்தர கன்னடா, தட்சின கன்னடா, உடுப்பி போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள குமாரதாரா, நந்தினி, சீதாநதிபால்குணி ,நேத்ராவதி உத்ரகன்னட மாவட்டத்தில் வரதாநதி உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வரும் ஜூலை 12-ம் தேதி காலை 8:30 மணி வரை, இந்த பகுதிகளில் சிவப்பு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் சுமார் 205 மில்லி மீட்டர் மழை பதிவாக வாய்ப்புள்ளது. அரபி கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும்.
அதேபோல் ஜூலை 13, 14 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களுக்கும், சிவமொக்கா, சிக்கமகளூரு, குடகு மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. எனவே அந்த பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம். ஹாசன் மாவட்டத்தை பொறுத்தவரை ஜூலை 14 வரை மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும் வட கர்நாடகத்தில் உள்ள பெலகவி, கல்புரகி, தாத்வாட், ஹாவேரி, விஜயபுரா மற்றும் யாதகிரி ஆகிய மாவட்டங்களுக்கும் திங்கட்கிழமை மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.