டெல்லியில் கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி பிரகதி மைதான சுங்கப் பாதையைத் திறந்து வைத்து நடந்து சென்று பார்வையிட்டார். அப்போது சுரங்கப் பாதையின் ஓரத்தில் தண்ணீர் பாட்டில் ஒன்று இருந்தது.
இதைப் பார்த்த நரேந்திர மோடி கீழே குனிந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து அருகே இருந்த குப்பைத்தொட்டியில் போட்டார். பிரதமர் மோடி தண்ணீர் பாட்டிலை எடுத்து குப்பைத் தொட்டியில் போடும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது.
இந்த புகைப்படத்தைப் பார்த்த பலரும் பாராட்டியும், விமர்சித்து இணையத்தில் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று டெல்லியில் கொட்டி தீர்த்த கண மழையில் பிரதமர் மோடி திறந்து வைத்த சுரங்கப்பாதை முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளது.
இதையடுத்து, ஒரு தண்ணீர் பாட்டில் இருந்ததையே பொறுத்துக்கொள்ள முடியாத மோடி இந்த மழை தண்ணீரையும் உடனே அகற்ற வேண்டும் என இப்படி பலரும் சமூக வலைதளங்களில் பல விதமாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்த சதீஷ் ரெட்டி என்பவர் தண்ணீர் பாட்டில் எடுத்த மோடியின் புகைப்படத்தையும், தற்போது சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கி இருக்கும் புகைப்படத்தையும் இணைத்து பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துள்ளார்.
சதீஷ் ரெட்டி தனது ட்விட்டர் பதிவில், இது எந்த சுரங்கப்பாதை தெரியுமா? இதே சுரங்கப்பாதையில்தான் பிரதமர் மோடி சில வாரங்களுக்கு முன்பு காலி தண்ணீர் பாட்டிலை எடுத்து விளம்பரப்படுத்திக் கொண்டார். இப்போது வந்து சுரங்கப்பாதையைச் சுத்தம் செய்யுங்கள் என்று நான் கேட்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சதீஷ் ரெட்டியின் இந்த ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் சதிஷ ரெட்டியை போன்று பலரும் பிரதமர் மோடியை அவர் திறந்து வைத்த சுரங்கப்பாதையை ஒப்பிட்டு விமர்சித்து வருகின்றனர்.