பொதுவாக இந்தியாவில் மக்கள் அதிகமாக காணப்படும் இடங்களில் எல்லாம், சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இது பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இருக்கிறது. மேலும் சாலைபோக்குவரத்தை பெரிதும் பாதிக்கிறது.
இந்த மாதிரியான பிரச்னையை தீர்க்கும் வகையில் விரைவில் ஒரு சட்டம் கொண்டுவர இருப்பதாக ஒன்றிய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற இண்டஸ்ட்ரியல் டிகார்பனைசேஷன் மாநாட்டின் தொடக்க விழாவில் பேசிய நிதின் கட்காரி, இதனை பகிர்ந்துள்ளார்.
இந்த சட்டத்தை குறித்து பேசிய அமைச்சர், அந்த சட்டத்தின்படி சாலையை மறித்து, தவறாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை போட்டோ அனுப்பினால் உடனே அந்த வாகனத்தை அப்புறப்படுத்தி, அவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். அதோடு போட்டோ எடுத்து அனுப்புபவர்களுக்கு ரூ.500 பரிசுத்தொகையாக கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் இந்த திட்டத்தை விரைவில் கொண்டு வர இருப்பதாக கூறிய அமைச்சர், இந்த திட்டத்தால் சாலை குறுக்கே வாகனங்கள் நிறுத்துவதைத் தடுக்க முடியும் என்றும், சாலை போக்குவரத்தும் இடையூறுகள் இல்லாமல் சீராக இயங்கும் என்றும் கூறினார்.
ஆனால் இந்தச் சட்டம் எப்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும், எப்போது அமலுக்கு வரும் என்பதை குறித்து எந்த ஒரு கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.