உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் ஒருவன், தினமும் மொபைல் போனில் வீடியோ கேம் விளையாடுவது வழக்கம். இப்படி மொபைல் போனில் மூழ்கி கிடந்திருத்த சிறுவனை, அவரது தாயாரும் கண்டித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி, சிறுவன் கேம் விளையாடிக்கொண்டிருக்கும்போது, அவனது தாய் கண்டித்துள்ளார். மேலும் மொபைல் போனை பிடுங்க முயன்றுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், தன் தந்தை வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியால் சுட்டு தாயை கொலை செய்துள்ளார். அவரது தந்தை முன்னாள் இராணுவ வீரர் என்பதால் வீட்டில் துப்பாக்கி இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர் அந்தச் சிறுவன், தனது தாயின் உடலை இரண்டு நாட்களாக வீட்டில் மறைத்துவைத்திருக்கிறார். மேலும் இவரது தங்கையிடம் இந்த சம்பவம் பற்றி வெளியில் சொன்னால், கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுமுள்ளார்.
வீட்டில் இருந்த தாயின் உடலில் ஏற்பட்ட துர்நாற்றத்தை மறைக்க ரூம் ஸ்பிரே பயன்படுத்தியிருக்கிறார். இதனையடுத்து சம்பவமறிந்து வந்த காவல்துறையினர், சிறுவனிடமும், அவரது சகோதரியிடமும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தன் வீட்டிற்கு வந்த எலெக்ட்ரிஷியன் தான் தனது தாயை இவ்வாறு செய்ததாக அந்த சிறுவன் கூறியுள்ளார்.
அதன் பிறகு தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், தனது தந்தையிடமும், காவல்துறையிடமும் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து, FIR பதிவு செய்த காவல்துறை, சிறுவனுக்கு எதிராகக் கொலைப் பிரிவு (302)-ல் வழக்கு பதிவு செய்து சிறார் பள்ளிக்கு அனுப்பிவைத்தது.
இது குறித்து காவல்துறை கூறுகையில், அந்த சிறுவனை நீதிபதியிடம் அழைத்துச் சென்ற போது, தான் தான் தனது தாயை துப்பாக்கியால் சுட்டதாகவும், இதனால் தனக்கு மரண தண்டனை வழங்கினாலும் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதை கேட்ட நீதிபதி மிகவும் அதிர்ச்சிக்குள்ளானதாகவும், அந்த சிறுவனை சிறார் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
சிறார் சிறைக்கு சென்ற சிறுவன், அங்குள்ள மற்ற சிறார் கைதிகளிடம் தனது தாயைக் கொன்றதை பற்றி கவலைபடவில்லை என்று சிறார் காப்பகத்தின் பணியாளர் ஒருவர் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, சிறுவனின் சகோதரி, கொலையை தனது சகோதரன் செய்யவில்லை என்றும், தனது தாயின் மீது கொண்ட வெறுப்பைச் சாதகமாகப் பயன்படுத்தி கொலையைத் தான் செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதனால் இந்த சம்பவம் தலையும் இல்லாமல், வாலும் இல்லாமல் மிகவும் குழப்பத்திற்குள்ளானதாக இருக்கிறது.