கர்நாடக மாநிலம், ராமநகரை சேர்ந்த தந்தை ஒருவர் தனது மகளை மாண்டியா அரசு தலைமை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டும் என கூறியுள்ளனர்.
இதையடுத்து மகளை மருத்துவமனையில் இருந்த ஸ்கேன் மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கிருந்த ஊழியர்கள் ’மருத்துவமனையில் ஸ்கேன் இயந்திரம் சரியாக வேலை செய்யவில்லை, நீங்கள் வெளியே சென்று ஸ்கேன் எடுத்து கொண்டு வாருங்கள்’ என அலட்சியமாகக் கூறியுள்ளார்.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த அவர், தனது மகளை கைகளிலேயே தூக்கிக் கொண்டு ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று ஸ்கேன் எடுத்து வந்துள்ளார். இதையடுத்து சிறுமிக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து அரசு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் சிறுமிக்கு நேரம் கடந்தே சிகிச்சை செய்யப்பட்டதால்தான் அவர் உயிரிழந்துள்ளார் என சிறுமியின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.