மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தனிமனித அடையாளம் என கூறி ஆதாரை கொண்டுவந்து, அனைத்து விஷயங்களுக்கும் ஆதார் கட்டாயமாக்கியுள்ளது. ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் குடிமக்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் வருமான வரி செலுத்துவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்றும் தீர்ப்பளித்தது.
இதையடுத்து, வங்கிக் கணக்கு தொடங்க, அரசின் நலத்திட்டச் சலுகைகள் பெற ஆதார் அட்டையில் முகவரி முக்கியமானதாக மாறியுள்ளது. அதுமட்டுமல்லாது, பள்ளி கல்லூரிகளில் சேர்க்கைக்கும் பான் கார்டு, செல்போன் எண், அரசு மானியங்கள் பெற, வருமான வரிக் கணக்கு இப்படிப் பல சேவைகளில் ஆதார் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
அண்மையில் கூட ஆதார் எண்களைப் பொதுமக்கள் யாரிடமும் பகிரக்கூடாது என ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், 11 கோடி பேரின் ஆதார் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த 11 கோடி பேரும் விவசாயிகள் என்றும் தெரியவந்துள்ளது. பி.எம். கிசான் இணையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த தகவல்கள் திருடப்பட்டுள்ளது என அதுல் நாயர் என்பவர் தெரிவித்துள்ளார்.