உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் ஒரு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த போலிஸார் அந்த வீட்டிலிருந்த 16 வயது சிறுவன் மற்றும் அவரது தந்தையிடம் விசாரணை செய்துள்ளனர்.
பிறகு வீட்டில் பூட்டி இருந்த அறையை திறந்துபார்த்தபோது அதில் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் இறந்தவர் சிறுவனின் தாய் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலிஸார் சிறுவனிடம் தீவிரமாக விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.
சிறுவன் PUBG விளையாட்டிற்கு அடிமையானதால் அவரது தாய் கண்டித்து வந்துள்ளார். இருப்பினும் சிறுவன் தொடர்ந்து PUBG கேமை தனது செல்போனில் விளையாடிவந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று, ஆவேசமடைந்த அவரது தாய் PUBG கேமை விளையாட விடாமல் தடுத்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த அச்சிறுவன் வீட்டிலிருந்த தந்தையின் துப்பாக்கியை எடுத்து தாயைச் சுட்டு கொலை செய்துள்ளார். பிறகுத் தாயின் உடலை ஒரு அறையில் பூட்டிவைத்து, துர்நாற்றம் அடிக்காமல் இருக்க அறை முழுவதும் சென்ட் அடித்துள்ளார். மேலும், வீட்டிலிருந்த தங்கையிடம் நடந்த சம்பவத்தை வெளியே சொல்லக்கூடாது என மிரட்டி வந்துள்ளார்.
பின்னர் சம்பவம் நடந்து 2 நாட்கள் கழித்து துர்நாற்றம் வீசிய நிலையில் சிறுவன் போலிஸாரிடம் சிக்கியுள்ளார். இதையடுத்து போலிஸார் சிறுவனைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். PUBG விளையாட விடாமல் தாய் தடுத்தால் மகன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.