இந்தியாவில் 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி பா.ஜ.க ஆட்சியமைத்தது. அதில் இருந்தே மக்கள் வீரோ திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இதையடுத்து 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் பா.ஜ.க மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இந்நிலையில் இன்றுடன் பா.ஜ.க ஆட்சியமைத்து 8 ஆண்டுகள் நிறைவடைகிறது.
இந்நிலையில், பா.ஜ.கவின் 8 ஆண்டு ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்துள்ளதாகக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜய் மாகேன் விமர்சித்துள்ளார்.
இது குறித்து பேசிய அஜய் மாகேன்,"ஆட்சிக்கு வருவதற்கு முன் பா.ஜ.க அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது. பாஜக ஆட்சியில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி, விண்ணை முட்டிக் கொண்டிருக்கிறது. ஊடக சுதந்திரம், பாலின வேறுபாடு, சட்டம் ஒழுங்கு, சமூக நல்லிணக்கம், ஜனநாயக வளர்ச்சி, உணவு பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விஷயங்களில் சர்வதேச அளவில் இந்தியாவின் தரம் பலமடங்கு சரிந்து விட்டது.
பாஜக அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து விட்டது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. 8 ஆண்டுக்கால பாஜக ஆட்சியில் நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்குத் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. நமது எல்லைக்குள் சீனா தொடர்ந்து ஊடுருவி வருகிறது. ஆனால், பிரதமர் அமைதியாக இருக்கிறார்" என தெரிவித்துள்ளார்.
மேலும் பா.ஜ.க ஆட்சியின் 8 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் ‘8 ஆண்டுகள் - 8 சூழ்ச்சிகள் - பாஜக அரசு தோல்வி’ என்ற தலைப்பில் சிறு கையேட்டை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.