கேரள மாநிலம், கூடல் பகுதியைச் சேர்ந்தவர்கள் அபர்ணா, அனுக்கிரஹா, அபினவ். இவர்கள் மூன்று பேரும் கல்லடையார் ஆற்றுப் பகுதிக்குச் சென்றுள்ளனர். இங்கு இவர்கள் ஆற்றில் இறங்கி தங்களது செல்போனில் உற்சாகமாக செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென ஆற்று வெள்ளத்தில் மூன்று பேரும் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கிராமமக்கள் உடனே போலிஸாருக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுத்தனர். பிறகு அங்கு வந்த அவர்கள் மூன்று பேரையும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இதில் அனுக்கிராஹா, அபினவ் ஆகிய இரண்டு பேரை மட்டுமே தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அபர்ணா மாயமான நிலையில் மீட்பு பணி இன்னும் தொடர்ந்து வருகிறது.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தபோது அபர்ணாவும், அனுக்கிராஹாவும் 10ம் வகுப்பு படித்துவந்தன என்றும்,அபினவ் அனுக்கிராஹாவின் சகோதரி என்பதும் தெரியவந்தள்ளது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புதான் கோழிக்கோட்டைச் சேர்ந்த நபாத் பதாக் என்ற பள்ளி மாணவி தண்டவாளத்தில் செல்ஃபி எடுக்கும்போது ரயில் மோதி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மைக் காலமாகவே இளைஞர்களின் செல்ஃபி மோகத்தால் பலர் உயிரிழந்து வருவது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.